பாரதிராஜாவின் உதவி இயக்குனரும், இப்படத்தின் அறிமுக நாயகனுமான பாபு இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராள படங்களில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மிகத் துடிப்பான இளம் ஹீரோ. இவர் என்னுயிர்த் தோழன் படத்தில் அறிமுகம் ஆனபோது இளம் ஹீரோக்கள் யாருமே இல்லை.

ரஜினி,கமல், பிரபு, போன்றவர்களே தமிழ் திரையில் தெரிந்த ஹீரோக்கள். முறுக்கேறிய உடம்பு, ஆறடி உயரம், சிவந்த தேகம் என அறிமுகப் படத்திலேயே ரசிகைகள் தூக்கத்தைக் கெடுத்தார் இந்த ஹீரோ.

இவர் போகும் இடங்களில் எல்லாம் பெண்கள் இவரை மொய்த்தார்கள். பாபு, பாபு என்று உருகினார்கள்.. கேப் கிடைத்தால் பிடித்துக் கிள்ளினார்கள்.

புதுப் படங்கள் குவிந்தது. ஆனால் விதி வேறு மாதிரி முடிவு செய்தது. அந்த பெரிய இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி ஷூட்டிங் துவங்கியது.

கன்னியாகுமரி, முட்டம் பகுதியில் ஷூட்டிங். ஹீரோயின் முன் வில்லன்களிடம் சண்டை போடும் காட்சி படமாகியது.

ஒரு பெரிய பாறையில் இருந்து குதிக்க வேண்டும். டூப் போடலாம் என்று படப்பிடிப்புக் குழுவினர் கூறினார்கள். ஆனால் ஹீரோ சம்மதிக்க வில்லை.

நானே குதிக்கிறேன் என்றார். இயக்குனர் எவ்வளவோ கூறியும் ஹீரோ கேட்கவே இல்லை. ஷூட்டிங் ஆரம்பம்.

ஹீரோயினைக் காப்பாற்ற, ஹீரோ பாறையின் உச்சியில் நின்று வில்லனுடன் மோதவேண்டும். மோதினார்.

வில்லன் கீழே குதிக்க, ஹீரோவும் டூப் போடாமல் குதித்தார். விழுந்தார். அமம்ம்ம்மா என்று அலறினார். திடுக்கிட்டுப்போனார்கள் படக் குழுவினர்.

ஓடி வந்து ஹீரோவைத் தூக்கினார்கள். ம்கூம்..ஹீரோவால் எழ முடியாமல் கத்தினார்.. வலியால் துடித்து அலறினார்.

முதுகுத்தண்டு நொறுங்கி விட்டது…..!!

ஆயிற்று இருபது வருடங்களுக்கும் மேலாக..! ஹீரோ படுத்த படுக்கையில் அசைவற்றுக் கிடக்கிறார்.

பராமரிக்கக் கூட ஆதரவு இல்லை. சாப்பாடு, இயற்கை உபாதைகள் மற்ற அனைத்துமே படுக்கையில். கழுத்துக்கு கீழே அசைவற்று கிடக்கிறார்.

ஆரம்பத்தில் அஜீத், பிரகாஷ்ராஜ் போன்றோர் நிறைய பண உதவி செய்தார்கள். ஆனால் இப்போது பாபுவின் நிலை என்னவென்று தெரியவில்லை..!

சினிமா என்பது கனவுத் தொழிற்சாலை. இங்கு உயிருக்கே உலை வைக்கும் சாகசகங்களில் ஈடுபடுவது எதிர் காலத்தையே கேள்விக் குறி ஆக்கிவிடும்.

இன்று வரை உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் இருக்கும் அந்த நல்ல ஹீரோவிற்கு இனி யார் வந்து உதவ முடியும்