அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வராக வேண்டி பழனி மலையடிவாரத்தில் உள்ள புலிபாணி ஆசிரமத்தில் சுதாகரன் பூஜை நடத்திவருகிறார்.

கடந்த 7-ம் தேதி இரவு திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். சுமார் 40 நிமிடங்கள் மௌனமாக இருந்து தியானம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தியானத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா மீது சரமாரியாக குற்றம்சாட்டியதோடு, தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகக் கூறி பரபரப்பை உண்டாக்கினார். இதையடுத்து, பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கினார் சசிகலா.

பன்னீர்செல்வம்- சசிகலா இடையே நடக்கும் அதிகார மோதல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பன்னீர்செல்வத்துக்குக் கட்சியில் ஆதரவு பெருகி வருகிறது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் நேற்று பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பன்னீர்செல்வத்திடம் இருந்த பொருளாளர் பதவியை உடனடியாக பறித்த சசிகலா, மதுசூதனனிடம் இருந்து அவைத் தலைவர் பதவியை இன்னும் பறிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். அவரை முதலில் முதல்வர் பன்னீர்செல்வம் சென்று பார்த்தார். அப்போது, தான் ராஜினாமா செய்ததை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்பதற்கான கடிதத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சசிகலாவை சட்டமன்ற ஆளும்கட்சித் தலைவராக நியமித்ததை ஏற்கக்கூடாது, எல்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டுள்ளதாக நான்கு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த புகார் நகல் மற்றும் தனக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதை நிரூபிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்கான அனுமதி கேட்கும் கடிதத்தை அவர் வழங்கியதாகத் தெரிகிறது. பின்னர், சசிகலா, ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இருவரின் சந்திப்புக்குப் பின்னர், குடியரசுத் தலைவருக்கும் மத்திய உள்துறைக்கும் அறிக்கை அனுப்பினார் ஆளுநர். முதல்வர் பன்னீர்செல்வத்தை சட்டப்பேரவையில் மெஜாரிட்டி காட்ட அனுமதிப்பாரா, அல்லது சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே இருக்கும் நிலையில், சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரன் இன்று பழனி சென்றார். பழனி மலையடிவாரத்தில் உள்ள புலிபாணி ஆசிரமத்துக்குச் சென்ற அவர், சசிகலா முதல்வராக வேண்டி பூஜை செய்து வருகிறார்.