அதிமுகவின் அரசு ஒப்பந்தகாரர் சுப்பிரமணியன் மரணம் குறித்த மருத்துவ அறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டனர். அதில் குருணை மருந்து சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் குவாரிகள் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

அப்போது நாமக்கல் டீச்சர் காலணியில் வசிக்கும் அவரது நண்பரும் அரசு ஒப்பந்தகாரருமான சுப்பிரமணியன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது. ஆவணங்கள் தொடர்பாக பலமுறை வருமான வரித்துறையினர், சுப்பிரமணியிடம் இரண்டு கட்ட விசாரணையும் நடத்தினர்.

இன்று முன்றாம் கட்ட விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறையினர் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தான் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுப்பிரமணியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். சுப்பிரமணிக்கு புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி மற்றும் கருர் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணி காண்ட்ராக்ட்டுக்கள் அனைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை சுப்பிரமணி வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான போது அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் சுப்பிரமணிதான் முதல் குற்றவாளியாக உள்ளார்.

அவர் அனைத்து உண்மைகளையும் அதிகாரிகளிடம் தெரிவித்தது குறித்து அமைச்சரிடமும் தனது நண்பர்களிடமும் கூறியுள்ளாராம். மேலும் விசாரணையின் போது அதிகாரிகள் தன்னிடம் கொச்சை வார்த்தைகளில் பேசியதாகவும் அதனால் மிகுந்த வருத்தமடைந்து இருப்பதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் மோகனூர் செவுட்டு நாயக்கன்பட்டியில் சுப்பிரமணிக்கு சொந்தமாக 10ஏக்கர் தோட்டத்தில் உள்ள பண்னை வீட்டில் அவர் குருனை மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது தற்கொலைக்கு பின்னணியில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுப்பிரமணியின் மகன் சதீஷ் தற்போது நாமக்கல்லில் உள்ள முக்கிய புள்ளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரை வெளிநபரிடம் பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லையாம்.

அதேபோல் குடும்பத்தினரும் தனது உறவுக்காரர்கள் மற்றும் வெளிநபர்களிடம் பேசக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளராம் முக்கிய புள்ளிகள்.

அதிமுகவின் முக்கிய புள்ளிகள் கட்டுப்பட்டில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவே தயங்குகின்றனராம். இந்த வழக்கை 174 செக்ஷனில் முடிக்கலாமா என்று உயர் அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.