இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட்டால் பலுசிஸ்தானை இந்தியா தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி-யுமான சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான் மாநிலம் பாகிஸ்தானின் 4 மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமாகும். பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனிநாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானை வெறுப்பேற்றுவதற்காக இப்படி ஒரு கருத்தை சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட ”இந்தியாவும் சர்வதேச தீவிரவாதமும்” என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

அதையும் மீறி ஜாதவ் தூக்கிலிடப்பட்டால், சர்ச்சைக்குரிய பலுசிஸ்தான் மாநிலத்தை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி பாகிஸ்தானை பலுசிஸ்தான், பக்துனிஸ்தான், சிந்த் என்ற 3 நாடுகளாக பிரிக்க வேண்டும். அதுவே பாகிஸ்தானுக்கு இந்தியா புகட்டும் சிறந்த பாடமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பாகிஸ்தானை தீவிரவாத ஆதரவு நாடு என்று அறிவிப்பதால் மட்டும் எந்தவித விளைவுகளும் ஏற்படப்போவதில்லை. மாறாக பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பை சீர்குலைப்பது ஒன்றே எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு நிரந்தர தீர்வாக அமையும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கு அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட வேண்டும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு சொந்தக்காரரான சுப்பிரமணியன் சுவாமியின், பாகிஸ்தானை சீர்குலைக்க வலியுறுத்திய இந்த கருத்து பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.