நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பரபரப்பு சூழல் உருவாகியுள்ள நிலையில், மாணவர்கள், இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்கல் மளமளவென பரவியதால் சென்னை போலீசார் அச்சமடைந்தனர். திடீரென ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மாணவர்களும் இளைஞர்களும் மெரினாவில் குவிந்தது போல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் குதித்துவிடப் போகிறார்கள் என்று போலீசார் பீதி அடைந்தனர்.

இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மெரினா கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார், மாணவர்கள் நடத்த வாய்ப்புள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.