ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் பங்கேற்பதற்காக திரைப்பட இயக்குனர் அமீர் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதிக்கு வந்தார். அவர், இளைஞர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு, பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டை தடை செய்த மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் சான்றாக நடக்கும் ஜல்லிக்கட்டை தடைசெய்வது கண்டிக்கத்தக்கது. தமிழரின் பாரம்பரியத்தை தடை செய்ய நினைக்கும் பீட்டாவை தடை செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதிலும் இருந்து அலங்காநல்லூரில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு போராடி வருகின்றனர். இளைஞர்களின் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இளைஞர்களுடன் நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழர்களின் உண்மையான உணர்வை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.