Connect with us

Cinemapettai

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது? மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த தமிழக அரசு..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது? மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த தமிழக அரசு..

ஸ்டெர்லைட் ஆலைக்குச் செல்லும் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்து விட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இதனால், அந்த ஆலை இனிமேல் இயங்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை, இழப்பீடு உள்ளிட்டவைகள் குறித்து தொடரப்பட்ட 8 வழக்குகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரிக்கிறது. இதனிடையே போராட்டம் வீரியமடையா வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணைய வசதி முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 144 தடை உத்தரவு வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியில் வந்தாலே கைது என்ற நிலையில், அம்மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர்.

இந்தநிலையில், தூத்துக்குடி ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி, எஸ்.பி. முரளி லம்பா ஆகியோர் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினரோடு ஆலோசனை நடத்தினர். பின்னர், தூத்துக்குடியில் அமைதி திரும்பும் வண்ணம் பல்வேறு தரப்பின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நான் இந்த மாவட்டத்தின் ஆட்சியராக இன்றுதான் பதவியேற்றேன். காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமைதி திரும்ப நடவடிக்கை எடுப்பதுதான் எனது முதல் பணி என்று தெரிவித்திருந்தேன்.

அப்போது பெரும்பாலான செய்தியாளர்கள் என்னிடம் எழுப்பிய கேள்வி, உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளிவரும் என்பதுதான். அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 102 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். போலீசாரைப் பொறுத்தவரை 34 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முக்கியமான கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் மக்களின் தலையாய கோரிக்கை. அந்த ஆலை மூடப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முடிவும். அந்த ஆலைக்குச் செல்லும் மின்சாரம் ஏற்கனெவே துண்டிக்கப்பட்டு விட்டது.தண்ணீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்த ஆலையை மூடுவதற்கான சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆலையை மூடும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால்தான், தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று அந்த ஆலைக்கு வழங்கப்படாமல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனிமேல் அந்த ஆலை செயல்படுவது என்பது முடியாது. எனவே மக்கள் போராட்டத்தை விடுத்து அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். வணிகர்கள் கடையைத் திறக்க வேண்டும். பேருந்து போக்குவரத்தும் விரைவில் சீர் செய்யப்படும்’ என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top