Tamil Nadu | தமிழ் நாடு
கொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வலுத்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்க்சி சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தமிழக அரசைக் கண்டித்தும் போலீசைக் கண்டித்தும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன், ஜாம்பியா உள்ளிட்ட இடங்களிலும் வேதாந்தா குழுமத்துக்கு எதிரான போராட்டத்தை தமிழர்கள் மேற்கொண்டனர். லண்டனின் அனில் அகர்வாலின் மகனைத் தாக்கியதாக போராட்டக்காரர்கள் சிலரை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.ster
இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூருவின் முக்கியமான சாலையான மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள், `கொலைகார வேதாந்தா நிறுவனமே தமிழகத்தைவிட்டு வெளியேறு’ என்று கோஷமிட்டதுடன், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இது உள்பட பெங்களூருவில் இரண்டு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் 8வது மாடியில் அமைந்திருக்கும் வேதாந்தா நிறுவன ஊழியர்கள் கீழே இறங்கி வந்து மன்னிப்பு கேட்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி போராட்டக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
