sridevi

சோனம் கபூரின் மெஹந்தி விழாவில் ஸ்ரீதேவியின் பாடல்களுக்கு ஆட மாட்டேன் என ஜான்வி கபூர் அடம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி, கபூர் குடும்பத்தின் மருமகள். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி. இவருக்கு தமிழில் இருக்கும் புகழுக்கு சமமாக இந்தி உலகிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த வருடம் தொடக்கத்தில் துபாய் சென்ற ஸ்ரீதேவி, திடீரென மரணமடைந்தார். இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும், அவர் உடலை இந்தியா எடுத்து வர அந்த குடும்பம் பட்ட அவதி தான் அதிகம். இதனால், போனி கபூரும், அவரது மகள்களும் இன்னும் உடைந்து தான் காணப்படுகிறார்கள்.

கடந்த மாதம் நடைபெற இருந்த சோனம் கபூரின் திருமணம் கூட தள்ளி வைக்கப்பட்டது. பெரியம்மா ஸ்ரீதேவியின் மீது உயிராக இருக்கும் சோனம் திருமணத்தை கூட ஆடம்பரம் இல்லாமல் நடத்த இருப்பதாக அறிவித்தார். தன் காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து கொள்கிறார். அஹுஜா டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால், மும்பை போன்று டெல்லியிலும் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனம் கபூரின் திருமண மெஹந்தி விழா நேற்று நடைபெற்றது. இதில், ஜான்வி, குஷி, அன்ஷீலா மற்றும் ஷனாயா கலந்து கொண்டனர். பாலிவுட் பாடல்களுக்கு ஜான்வி மற்றும் குஷி நடனமாடினார். முன்னதாக, ஜான்வி, ஸ்ரீதேவியின் பாடலுக்கு நடனம் ஆடுவார் என கூறப்பட்டது. ஆனால், எல்லாரும் கோரிக்கை வைத்தும் கண்டிப்பாக அம்மா பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன் என ஜான்வி மறுத்து விட்டாராம். முன்னதாக, தேசிய விருது வழங்கும் விழாவில் கூட அம்மாவின் பெயரை கேட்டதும் ஜான்வியால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை என அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது.