fbpx
Connect with us

Cinemapettai

சிறு குண்டூசியை கூட மறக்காத எஸ்.பி.பி! ஆஹா… இவரல்லவா மனுஷன்!

spb jesudas

News | செய்திகள்

சிறு குண்டூசியை கூட மறக்காத எஸ்.பி.பி! ஆஹா… இவரல்லவா மனுஷன்!

பாட வந்து ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்த ஐம்பதாண்டுகால நிறைவு என்பது, சாதனையின் உச்சம்! பாட்டும் ‘நோட்டுமாக’ தன்னை வளர்த்தெடுத்த அத்தனை பேருக்கும் நன்றி செலுத்த நினைத்த எஸ்.பி.பி, தனது முதல் மரியாதையை குருநாதர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு பாதபூஜை செய்து கொண்டாடினார். அந்த நிமிஷங்கள் தமிழ்சினிமாவின் சாதனை வரலாற்றின் மிக மிக முக்கியமான நிமிஷங்கள். பாடல் உலகில் கிட்டத்தட்ட சம அந்தஸ்தில் இருக்கிற இவ்விருவரும் ஒருவரையொருவர் மதித்துக் கொண்ட இந்த அழகுதான் பேரழகு! மனைவியோடு வந்திருந்த ஜேசுதாஸ், எஸ்.பி.பி யின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். மிக மிக உருக்கமான வினாடிகள் அவை.

இப்படி பெரிய சாதனையாளர்களை மட்டுமல்ல, தன் வளர்ச்சியில் அக்கறை கொண்ட சமானிய மனிதர்களையும் நினைவில் கொண்டு மரியாதை செய்தார் எஸ்.பி.பி.

ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் பாதுகாப்பை மீறி அழைத்துச் சென்ற பால்ய நண்பனையும் மேடையில் ஏற்றி, “இவன் இல்லேன்னா நான் தமிழ்சினிமாவில் இல்லை” என்று சொல்கிற பெருந்தன்மை வேறு யாருக்கு வரும்?

அதற்கு முன் தெலுங்கில் சில படங்களில் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பிக்கு ‘சாந்தி நிலையம்’ படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வந்துவிட்டது. தமிழில் முதல் வாய்ப்பு. ஸ்டூடியோவுக்கு நண்பருடன் சென்று விட்டார். போனால், வாசலில் செக்யூரிடி உள்ளேயே விடவில்லையாம் இருவரையும். “அவங்கதான் வரச்சொன்னாங்க” என்று கூறிய பின்பும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக விரட்டினாராம் அவர். ஆனால் உடன் வந்த நண்பர் எஸ்பிபிக்காக எவ்வளவோ மன்றாடினார். கடைசியில் ஒரு விஷயம் செய்தார். “கொண்டு வந்த சைக்கிளை இங்கே விட்டுட்டு நான் மட்டும் உள்ளே போறேன். அங்கிருந்து யாரையாவது அழைச்சுட்டு வந்து உங்ககிட்ட சொல்ல சொல்றேன்” என்று போராடி ஒரு வழியாக உள்ளே சென்றிருக்கிறார். அதற்கப்புறம்தான் ஸ்டூடியோவுக்குள் நுழையவே முடிந்தது எஸ்.பி.பி யால். கிட்டதட்ட இரண்டு மணி நேரம் இதிலேயே தாமதம் ஆகிவிட்டது.

“இந்த அவமானம் வேணாம். போய்விடலாம்” என்று திரும்பிப் போகவிருந்த எஸ்.பி.பியை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்ற நண்பரையும் பத்திரிகையாளர்கள் முன் அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி, “இவன் மட்டும் இல்லேன்னா நான் தமிழ்ல பாடியிருக்க முடியாது” என்று கூறினார்.

ஐம்பது வருடங்களை கடந்தபின்பும் இவருடன் தொடர்பில் இருக்கிற அந்த நண்பரையும், அந்த நண்பரின் உதவியை இப்போதும் மறக்காத எஸ்.பி.பியையும் என்னவென்று பாராட்டுவது? உங்களை மாதிரி சிலர் இருப்பதால்தான், வருஷத்தில் கொஞ்சமாவது மழை பெய்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top