சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில், சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யாவின் அசரவைக்கும் நடிப்பில் தயாரான படம் தான் சூரரைப் போற்று.
இந்தப்படம் கொரோனா வைரஸ் காரணமாக இன்று நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று படத்தை பாராட்டித் தள்ளிய அஜித் என செய்திகள் வேறு வைரல் ஆகிறது. இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி, கருணாஸ், மோகன்பாபு, ஊர்வசி, விவேக், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படத்தினை மெருகேற்றி உள்ளனர்.
அதாவது ஏர் பூட்டும் விவசாயி முதல் அனைவரும் ஏரோப்ளேனில் பயணிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையை மையமாகக் கொண்டதுதான் சூரரைப்போற்று. அதாவது ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை தழுவி அவர் எழுதிய ‘Simply fly’என்ற நூலின் அடிப்படையில் சூரரை போற்று படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.
அதனடிப்படையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் சூர்யாவும், அப்பா ஆறுவிரல் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் பூ ராமுவும் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றனர்.

அந்தவகையில் கிராமத்தின் அடிப்படை தேவைகளை அகிம்சா வழியில் மனு எழுதி போட்டு நிறைவேற்றும் அப்பா மற்றும் போராட்டத்தால் அதில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அவரின் மகன் சூர்யா. இருவருக்கும் இடையே மோதல் வலுக்க சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமான படை அதிகாரியாக தேர்வாகி செல்கிறார்.
மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பும் சூர்யா, விமானத்தில் பறப்பது ஒன்றையே பெருங் கனவாய் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஆயிரம் ரூபாயில் ஏன் ஒரு ரூபாய் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்க போராடுகிறார்.
இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவியும் கேட்கிறார். இதனால் ஏற்படும் லைசன்ஸ் சிக்கல், பெரும் பணக்காரர் விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், பொருளாதார சிக்கல், குடும்ப விரிசல், கடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல நெருக்கடிகளை சந்தித்தாலும், அவரின் கனவு எப்படி சாத்தியமானது என்பதை உயிரோட்டத்துடன் எடுத்துச் சொல்லி இருக்கிறார் சுதா கொங்கரா.
மேலும் சூர்யா 1977 முதல் 2003 வரை வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பில் மட்டுமல்லாமல், தனது உடல் வடிவத்திலும் மாற்றத்தை காட்டி மாஸ் பண்ணியிருக்கிறார். அழுகை, கோபம், ஆத்திரம், காதலென நவரச உணர்வுகளையும் திரையில் மிக நேர்த்தியாக காட்டியிருப்பது சூர்யாவின் சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.
மேலும் அபர்ணா முரளி பொம்மி கதாபாத்திரத்திற்கு சிறப்பான தேர்வாக விளங்கி அடாவடியான நடவடிக்கையாலும், நக்கல் பேச்சாலும் ரசிகர்களை பெருமளவு ரசிக்க வைத்திருக்கிறார். இதே போல் சூர்யா அபர்ணா இடையேயான காதல் காட்சிகள் சற்று இழுக்கிறது. அதனை சரி செய்து இருக்கலாம்.
இறுதி சுற்று படத்தின் மூலம் ஒரு பாக்சிங் வீராங்கனை போராட்டங்களை சொல்லிய சுதா கொங்கரா விமான சேவையில் இருக்கும் நுட்பங்களை எளிமையாக புரியவைக்க முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் புரிவது ரொம்ப கடினம்தான். சூரரைப் போற்று படத்தை வசனங்களால் மெருகூட்டி இருக்கிறார் விஜயகுமார். மறுபுறம் எடிட்டர் சதீஷ் மற்றும் கேமராமேன் நிகித் பொம்மி ரெட்டி படத்தின் சுவாரஸ்யத்தை குறைய விடாமல் சூப்பராக வேலை செய்திருக்கிறார்கள்.
சூரரைப் போற்று படத்தில் பெரிதும் பாராட்டப்படவேண்டிய ஒருவர் ஜிவி பிரகாஷ். ஏனெனில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது இவர்தான். சூரரைப்போற்று படத்தின் எதிர்பார்ப்பை எகிற விட்டதற்கு முழு காரணம் ஜிவி பிரகாஷின் பாடல்கள்தான். மேலும் படத்தின் பின்னணி இசையிலும் ஜிவி பிரகாஷ் மாஸ் காட்டியிருக்கிறார்.

இறுதியாக:
எளிய மனிதர்களின் விமானசேவை கனவை நிறைவேற்ற பல தடைகளையும் போராட்டங்களையும் சந்தித்து, அதில் வெற்றி கண்ட ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை ஆழமாக பதிவு செய்ததில் சுதா கொங்கரா முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை. லாஜிக் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும் பல அபத்தங்கள் எல்லாம் மிகவும் அநியாயம். இயக்குனர் திரைக்கதையை சரி செய்து இருக்கலாம். மிக எளிதாக படத்தை யூகிக்கலாம். ஆனால் அதெல்லாம் விட்டுவிட்டு சூர்யா மற்றும் மற்ற கலைஞர்கள் உழைப்பிற்காக படத்தை பார்க்கலாம்.