பெரியம்மா ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு திருமணம் செய்ய இருக்கும் சோனம் கபூர் இத்திருமணத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. வயதானாலும் 16 வயதினிலே படத்தில் தோன்றிய மயிலாகவே கடைசி வரை காட்சி அளித்தார். 40 வயதிற்கு மேல் அவர் நடித்த படங்கள் அனைத்துமே பேசப்பட்டது. ஒரு தாயின் வலியை சொல்லும் மாம் படத்திற்காக ஸ்ரீதேவிக்கு கடந்த வருடத்தின் தேசிய விருது கொடுக்கப்பட்டது. ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். வயது வித்தியாசம் அதிகம் என்றாலும் இவருக்கும், போனி கபூருக்கும் காதல் என்றுமே இளமையாகவே இருந்தது. இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் இருக்கிறார்கள். தாய் என்ற விஷயத்தில் கடும் கண்டிப்பானவர் ஸ்ரீதேவி. ஜான்வி பாலிவுட்டில் தடக் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள மகள் குஷி மற்றும் கணவர் போனியுடன் துபாய் சென்றார் ஸ்ரீதேவி. பின்னர், அவர் தங்கி இருந்த அறையின் குளியலறை தொட்டியில் விழுந்த ஸ்ரீதேவி மூச்சு திணறி உயிர் இழந்தார். இதனால், அக்குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. இதனை தொடர்ந்து, அவரது கணவரின் தம்பி அனில் கபூரின் மகளான சோனம் கபூரின் திருமண தேதி இந்த மாத இறுதியில் இருந்து மே 7 மற்றும் 8 ஆக மாற்றப்பட்டுள்ளது.

sonam-kapoor

பல நாட்களாக காதலித்து வந்த காதலர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்ய இருக்கிறார் சோனம். தனது திருமணத்தை சுவிட்சர்லாந்தில் ஆடம்பரமாக நடத்த ஆசைப்பட்டார் சோனம். ஆனால், ஸ்ரீதேவியின் திடீர் மறைவால் அந்த முடிவை கைவிட்டு இருக்கிறார். இதனால், எளிமையாக மும்பையிலேயே திருமணம் நடைபெற இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சியை மும்பை, டெல்லி ஆகிய 2 நகரங்களில் மிக சிறப்பாக நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு அனில் கபூரும் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். ஸ்ரீதேவி மரண சோகத்தில் இருந்து இன்னும் அக்குடும்பம் வெளிவரவில்லையாம். பெரியம்மாவின் மீது அதிக பாசம் வைத்திருந்த சோனம், அவர் இல்லாமல் ஏன் இந்த ஆடம்பரம் என்ற முடிவை எடுத்ததாக தெரிகிறது.

சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஸ்ரீதேவியின் பாடல்களுக்கு அவரது மகள் ஜான்வி நடனம் ஆட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.