சசிகலா முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் 13 ஆக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொட்டும் உறைப்பனியிலும் தமிழக அரசியலின் பரபரப்பு கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்துக்கு நேற்று வருகைத் தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் சந்தித்தார். அடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சந்தித்தார். இதன்பிறகு குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இதற்கிடையில் ஆளுநரை சந்தித்து விட்டு பேட்டி அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘நல்லது நடக்கும்’ என்று சூசகமாக கூறினார். அதுபோல சசிகலா தரப்பு, ‘நிச்சயம் சின்னம்மா முதல்வராகுவார்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர். இந்நிலையில் எம்.ஏ.எல்.க்களிடமும் குதிரை பேரத்தை பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலாவின் முகாமிலிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற விடுதியில் தங்கியிருப்பதாகவும், சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆளுநரின் அழைப்புக்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் காத்திருக்கும் நேரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர்கள், “ஆளுநரிடம் 5 கோரிக்கைகள் தொடர்பான கடிதத்தை கொடுத்துள்ளோம். அதற்கு நிச்சயம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மேலும் 7 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டுள்ளனர். அவர்களின் பெயர், விவரத்தை சொன்னால் ஆபத்து நிச்சயம் ஏற்படும். குறிப்பாக கொங்கு மண்டலத்திலும், தென்மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் நெருக்கமானவர்கள் வெளிப்படையாகவே இந்த தகவலை எங்களிடம் சொல்லி இருக்கின்றனர். இதனால் எங்களின் பலம் 13ஆக உயர்ந்துள்ளது. சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் எங்களின் பலம் இன்னும் அதிகரித்து விடும். இதற்காகவே அவர்களை மன்னார்குடி குடும்பம் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சசிகலாவின் முகாமில் அவர்கள் இருந்தாலும் உண்மையில் அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசிகள். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்” என்றனர்.

இதுகுறித்து சசிகலா தரப்பில் கேட்டதற்கு, “ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சின்னம்மாதான். கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் ஒப்புதலோடு சசிகலா, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தீர்மான நகலை சசிகலாவிடம் கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். அடுத்து, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டசபை குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட போது கூட, ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், யாருடைய தூண்டுதலின்பேரில் கட்சியை உடைக்க முயற்சித்து வருகிறார். ஜெயலலிதாவால் ராணுவக்கட்டுப்பாடோடு செயல்பட்ட இந்தக்கட்சியை யாராலும் உடைக்க முடியாது. எங்களிடம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்” என்றனர்.

எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு என்று அவரது ஆதரவாளரான மூத்த நிர்வாகி கூறுகையில், “தற்போது, எங்களிடம் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்து 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களைத் தவிர மேலும் 7 பேர் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே ஆதரவு அளித்தவர்களைத் தவிர மேலும் 2 பேரும், சென்னையில் ஒருவரும், டெல்டா மாவட்டத்தில் ஒருவரும், தென்மாவட்டத்தில் ஏற்கெனவே ஆதரவு அளித்தவர்களைத் தவிர்த்து 3 பேரும் ஆதரவளிப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களால் சுதந்திரமாக எந்தத் தகவலையும் சொல்ல முடியவில்லை. சசிகலாவுக்கு பயமில்லை என்றால் எம்.எல்.ஏ.க்கள் சிறைப்பிடிக்காமல் வழக்கம்போல வெளியே விட்டு இருக்கலாம். ரிசார்ட்டில் கூட எங்களுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அவர்கள் அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கண்காணித்து வருகின்றனர். அதை நிச்சயம் வெளியில் சொல்வார்கள். அப்போதுதான் சசிகலா தரப்பினர் எம்.எல்.ஏ.க்களை எப்படி கட்டுப்படுத்தி வைத்திருந்த விவரம் தெரியவரும்”என்றார்.

இதற்கிடையில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதாவை கண்டுப்பிடித்து தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் காவல்துறை, அ.தி.மு.க. கட்சித்தலைமை ஆகியவை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு எம்.எல்.ஏ. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு சசிகலாவின் தலைமையை ஏற்காமல் இருந்து வந்தார். அவர் தற்போது ரிசார்ட்டில் இல்லை. இதனால் அவர் நிச்சயம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து, அ.தி.மு.க. கூட்டணியிலிருக்கும் கட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும், தன்னுடைய முடிவை இன்று கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து விட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியிலும், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் பெருகி வருவதை சசிகலா தரப்பு அதிர்ச்சியோடு கவனித்துக் கொண்டு இருக்கிறது.