மரணத்தில் முடிந்த 7 காதல் படங்கள்.. உயிரை விட்டு வெற்றிகண்ட தரமான லிஸ்ட்

பொதுவாக சினிமாவில் வெளியாகும் சில திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை ரொம்பவும் ஈர்த்துவிடும். அதிலும் சில குறிப்பிட்ட காட்சிகளின் தாக்கங்கள் ரசிகர்கள் மனதில் நெடுநாள் வரையில் இருந்து கொண்டே இருக்கும். அப்படி மரணத்தில் முடிந்து நம்மை சோகத்தில் ஆழ்த்திய உணர்ச்சிப்பூர்வமான சில காதல் திரைப்படங்களை பற்றி காண்போம்.

7ஜி ரெயின்போ காலனி:: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் பலருக்கும் பிடித்த காதல் படம். பல வருடங்களுக்கு முன் வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்றும் ஒரு காதல் காவிய திரைப்படமாகும்.

பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நாயகன், அவனை தன் காதலால் திருத்தம் நாயகி என்று உணர்ச்சிப்பூர்வமான ஒரு கதையாக இது இருந்தது. அப்படிப்பட்ட இந்த காதல் ஜோடி இணையும் நேரத்தில் திடீரென ஹீரோயின் மரணமடைந்து விடுவார். இப்படி ஒரு கிளைமாக்ஸை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ரசிகர்களின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பெருமை இப்படத்திற்கு நிச்சயம் உண்டு.

மைனா இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் அமலாபால், விதார்த், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த திரைப்படம் மைனா. சிறு வயதிலிருந்தே ஹீரோ, ஹீரோயின் இருவரும் காதலிப்பார்கள். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு காட்டிய பெற்றோர்களை பிரிந்து வெளியேறும் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

ஒருவழியாக பிரச்சனை எல்லாம் முடிந்து ஹீரோ தன் காதலியை திருமணம் செய்து கொள்ள ஆசையாக தேடி வரும் பொழுது எதிர்பாராத விதமாக ஹீரோயின் இறந்து கிடக்கிறார். இதைப் பார்த்து தாங்க முடியாத ஹீரோவும் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த மரண காட்சி படம் பார்த்த அனைவரையும் கலங்க வைத்தது.

குணா: இது தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த காதல் காவியமாக கொண்டாடப்பட்ட திரைப்படம். மனநல பாதிப்படைந்த இளைஞராக நடித்திருந்த கமல்ஹாசன் நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. தன் காதலி அபிராமியை நினைத்து அவர் உருகும் ஒவ்வொரு காட்சியும் கைதட்டலை பெற்றது.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்று அவர் கூறும் வசனம் அப்போது மிகவும் பிரபலம். இறுதியில் காதலியின் மரணத்தைப் பார்த்து கலங்கி அவருடன் சேர்ந்து மலையில் இருந்து குதித்து உயிர் விடும் அந்த கிளைமாக்ஸ் காட்சி படம் பார்த்த அனைவரையும் பதறச் செய்தது. இந்த படத்திற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பல விருதுகளைப் பெற்றார்.

சேது: பாலாவின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் நடிகர் விக்ரமின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை படம் ஆகும். கல்லூரியில் கலகலப்பாக சுற்றி வரும் இளைஞர், நாயகியை பார்த்து காதல் கொள்கிறார்.

ஆனால் காதலியுடன் சேர்ந்து வாழ முடியாமல் மன நலம் பாதிப்படையும் ஹீரோ ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு தன் காதலியை பார்க்க வருவார். அங்கே எதிர்பாராத விதமாக அவருடைய காதலி தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவார். இதனால் ஹீரோ மீண்டும் மனநலம் பாதிப்படைவது போன்ற காட்சியோடு படம் முடிவடையும். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலர் நாள் வரை அதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவித்தனர்.

பிதாமகன்: பாலாவின் இயக்கத்தில் விக்ரம், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பிதாமகன். மேல் தட்டு வர்க்கத்தினரின் அடக்குமுறையை பற்றி எடுத்துக் கூறிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய திரைப்படமாகும்.

நண்பனுக்காக போராடும் சூர்யா, அவரின் மரணத்தை பார்த்து வில்லனை கடித்து கொள்ளும் விக்ரம் என்று இருவரும் நடிப்பில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். சூர்யா இறந்து போகும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அவரது ரசிகர்களை கண்கலங்க செய்தது. அருமையான திரைக்கதைக்காக இந்தப் படம் பல விருதுகளை பெற்றது.

மனசெல்லாம்: ஸ்ரீகாந்த், திரிஷா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படமும் ஒரு காதல் திரைப்படமே. காதலர்களாக சுற்றி திரியும் ஹீரோ, ஹீரோயின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முற்படும் போது திரிஷா ஒரு நோயால் பாதிக்கப்படுவார்.

கடைசியில் த்ரிஷா உயிருக்காக போராடும் அந்த இறுதிக்காட்சி, அவரின் மரணத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் ஸ்ரீகாந்த் தன் காதலி உயிருடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன் என்று அந்த இடத்தை விட்டு விலகும் காட்சி போன்ற அனைத்தும் அந்த திரைப்படத்தில் ரசிக்க வைத்தது.

பருத்திவீரன்: அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்திக். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தார். கிராமத்தின் சாயலை எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கிளைமாக்ஸ் காட்சியில் பிரியாமணி கொடூரமாக கொல்லப்படுவார், அதற்குப் பின்னரே கார்த்திக்கும் இறந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மரணத்தை வைத்து நம்மை ஈர்த்த இந்த திரைப்படங்கள் அனைத்தும் இன்றும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

Next Story

- Advertisement -