fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனை வைத்து கோடம்பாக்கம் ஆடும் கோடி கணக்குகள்! அதிர்ச்சித் தகவல்கள்

Sivakarthikeyan

சிவகார்த்திகேயனை வைத்து கோடம்பாக்கம் ஆடும் கோடி கணக்குகள்! அதிர்ச்சித் தகவல்கள்

என்னைய வேலை செய்ய விடுங்க’ என சிவகார்த்திகேயன் கலங்கியதில் இருந்தே கொஞ்சம் சலசலத்து தான் கிடக்கிறது கோடம்பாக்கம் ஏரியா.சிம்பு, விஷால் என பலரும் சிவாவுக்கு ஆதரவாக களம் இறங்கி வரிந்துகட்ட,  தற்போது விவகாரம் வேறு வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

‘ரெமோ’ வெற்றி விழாவில் தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் நெருக்கடி கொடுப்பதாகவும் நான் யாரை சொல்கிறேன் என அவர்களுக்குத் தெரியும் என மேடையில் பொங்கினார் சிவகார்த்திகேயன். இதைத்  தொடர்ந்து, நடிகர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த புகாரில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தவிர எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய இருவரும் முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு படங்கள் எதுவும் நடித்து கொடுக்க முடியாது என்று இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன தான் பிரச்னை!

தற்போது சிவகார்த்திகேயன்  புகார் அளித்துள்ள இந்த மூன்று தயாரிப்பாளர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் சிவாவிற்கு மிகவும் நெருக்கமாகவே இருந்துள்ளனர். எஸ்கேப்  ஆர்ட்டிஸ்ட் மதன், சிவாவின் கேடி பில்லா கில்லாடி ரெங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே,காக்கி சட்டை போன்ற படங்களை தயாரித்தவர். மற்ற இருவரும் சிவாவின் படங்களை வெளியிட்டவர்கள். தற்போது சிவாவுக்கு இவர்கள் எந்தவிதத்தில் தொந்தரவு கொடுக்கிறார்கள் என எதையும் வெளிப்படையாக சொல்லவில்லை. திரைத்துறை வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது பல விஷயங்கள் வெளிவந்தன .

வேந்தர் மூவிஸ் மதன் சிவாவின் படங்களை வெளியிட்டு வரும்போதே அவரின் கால்ஷீட்டை வாங்கியதாகவும் தற்போது மதன் தலைமறைவாக இருப்பதால் அவர் தொடர்பான கணக்குகளை அம்மா கிரியேஷன்ஸ் சிவா கவனித்து வருகிறார். மதன்,  மதுரை அன்புக்கு தர வேண்டிய பணத்தை சிவாவின் கால்ஷீட்டை கொடுத்து சரி கட்டிக் கொள்ள பார்ப்பதாகவும் இந்த தரப்பினர்தான்  சிவாவை நெருக்குவதாக கூறுகின்றனர். அதேபோன்று எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு ஆரம்ப காலங்களில் சிவா கொடுத்த வாய்மொழி உறுதியை வைத்துக்  கொண்டே தற்போது கால்ஷீட் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

ஞானவேல் ராஜாவுடனான ஒப்பந்தத்தை சிவாவே ஒப்புக்கொண்டு உள்ளார் . ஆனால் சிவா தற்போது உள்ள மார்க்கெட் சம்பளத்தைக் கேட்பதால் அதைத்  தர, அந்த நிறுவனம் தயங்குவதாகக்  கூறப்படுகிறது. இதுபோக இயக்குநர் பாண்டியராஜுக்கு மூன்று படங்கள் நடிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் உள்ளது. ஏற்கெனவே  இரண்டு படங்கள் முடித்துக் கொடுத்து விட்டார். மிச்சம் உள்ள ஒரு பட கால்ஷீட்டை பெரிய தொகை கொடுத்து வங்கியுள்ளதாகவும் தகவல் இருக்கிறது. இப்படி சிவா ஆரம்ப காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் இன்று அவர் வளர்ந்து நிற்கும்போது அவருக்கே பிரச்னையாக அதுவும் வளர்ந்து நிற்கிறது.

மற்றொரு பக்கம் சிவாவின் வளர்ச்சியும் சில பிரச்னைகளை அவருக்கு கொண்டு வந்து உள்ளது.முன்னணி நடிகர் ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள ஒருவரை வைத்துக் கொண்டு, ரெமோ படத்தை வாங்கக்  கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டியதாகவும் மீறினால் தீபாவளிப் படங்கள் கிடைக்காது என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய நிலையில் அஜித், விஜய் ஆகிய ஹீரோக்களுக்கு அடுத்து அதிகம் வசூலிப்பது சிவாவின் படங்கள் தான். முதல் வாரத்தில் அஜித், விஜய் படங்கள் 40 கோடிகள் வரை வசூலிப்பதாகக் கூறும் விநியோகஸ்தர் உலகம், ‘ரெமோ’ படம் கடந்த வாரத்தில் மட்டும் 25 கோடியை  வசூல் செய்துள்ளது என்றும் அதிர வைக்கிறது. இது திரையுலகினர் பலருக்கும் சிவகார்த்திகேயன் மீது பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிசுகிசு உலவுகிறது.

சிவா நடிகர் சங்கத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ,வேந்தர் மூவிஸ் மதன் தரப்பு வழக்கறிஞர் ஆகியோரைத் தொடர்பு கொண்டோம்.

முதலில் பேசிய எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், “நானும் சிவாவும் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பது ஊருக்கே தெரியும். எஸ்கேப் ,ஆர்ட்டிஸ்ட்  கம்பெனியின்  ஆர்ட்டிஸ்ட் என்பது நான் தான் என பல மேடைகளில் சிவா கூறியுள்ளார்.அவரோட ஆரம்ப கால வளர்ச்சியில் என்னோட பங்கு எந்த அளவுக்கு இருக்கு என்பது அவருக்கு தெரியும். புது நடிகர்களுக்கு யாருமே கொடுக்காத விளம்பரத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல சிவாவுக்குக்  கொடுத்தேன். அன்னைக்கு ‘டைட்டில் லான்ச் பங்ஷன்’ வைக்கும்போது புது பையனை வைச்சு ஏன் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறீங்கன்னு எல்லாரும் என்ன திட்டுனாங்க. அதபத்தி எல்லாம் நான் கவலைபடல. அவருக்கு நான் அட்வான்ஸ் கொடுத்தது உண்மை. அது சிவாவோட மனசாட்சிக்குத் தெரியும். நான் பணம் பத்தி பேச ஆரம்பிச்ச காலத்துல இருந்தே என் போனை அவர் எடுக்குறது இல்லை.நான் அவரிடம் பேசியே பல மாதங்கள் ஆகுது. அப்படி இருக்கும்போது எப்படி மிரட்ட முடியும். அவர் படங்களிலே ரொம்ப ஸ்மூத்தா ரிலீஸ் ஆனது ‘ரெமோ’ தான். அப்புறம் ஏன் மேடையில அழுது எங்களை வில்லன் மாதிரி சித்தரிக்கணும்?
தெரிஞ்சவங்க,சொந்தக்காரங்க எல்லாரும் போன் போட்டு கேக்குறாங்க. ஏன் இப்படி பண்றீங்கன்னு, நடக்காத ஒன்ன சொல்லும்போது கஷ்டமா இருக்கு. நான் சிவாவோட பல இக்கட்டான நேரங்கள்ல பண உதவி செய்து இருக்கேன். இது சிவாவுக்குத் தெரியும். அவங்க குடும்பத்துக்கும் தெரியும். இந்த உறவை பிரிக்கணுமின்னு  திட்டமிட்டு சிலர் சிவாவை அவங்க கட்டுப்பாட்டுல வச்சு இருக்காங்க. அதுல இருந்து அவர் வெளில வரணும். அவர் என்கிட்ட நேருக்கு நேர பணம் வாங்கலைன்னு இதுவரை சொல்லல. அப்படி சொல்லவும் மாட்டாருன்னு நினைக்குறேன்” என சொல்லி முடித்தார்.

அடுத்ததாக வேந்தர் மூவிஸ் மதன் தரப்பை அறிய அவர் மனைவியிடம் பேசினோம். அவர் என்னிடம் பேசுவதைவிட எங்கள் வழக்கறிஞரிடம் பேசுங்கள் என்றார்.வேந்தர் மூவிஸ் மதன் சார்பாக பேசிய அவரின் வழக்கறிஞர் இன்பேண்ட் தினேஷ், “வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போய்  6 மாதங்கள் ஆகிறது. அவரை கண்டுபிடிக்க காவல்துறையும் தனிப்படை அமைத்து தேடிவருகிறது. நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் தவித்து வருகிறோம். இந்த நேரத்தில் மதன் கால்ஷீட் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுக்கிறார் என சிவா கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அந்த மாதிரி மதன், அவரை மிரட்டிய ஆதாரத்தை சிவகார்த்திகேயன் கொடுத்தால் இந்த வழக்குக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆளே இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாத  ஒருத்தர் எப்படி மிரட்ட முடியும்.? மதன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் இப்போது,  அம்மா கிரியேஷன் சிவா தான் கவனித்து வருகிறார். இதுகுறித்து எதுவும் மதனின் குடும்பத்துக்குத் தெரிவிக்காமல் தான் நடந்து வருகிறது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பட வேலைகளை கூட சிவா தான் கவனித்து வருகிறார். மதன் யாருக்கு எல்லாம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் என்கிற விபரமும் அவருக்கு மட்டும்தான் தெரியும்.இப்போது அம்மா கிரியேஷன் சிவா யாருக்கு ஆதரவாகச்  செயல்படுகிறார் என்பதும் தெரியும். சிவாவை  மதன் சார்பாக, யார் மிரட்டினார் என்கிற உண்மையை அவர் சொல்லியே  ஆகவேண்டும்.இல்லை என்றால் மதன் குறித்து கூறியதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்” என சொல்லி முடித்தார்

பல வருடங்களுக்குப் பிறகு, ரெமோவின் விநியோகஸ்த உரிமை பெற்ற திருப்பூர் சுப்பிரமணியம் இதுகுறித்து கூறும்போது,”இந்த பிரச்னைகள் எல்லாமே சில நாட்களில் சுமூகமாக முடிந்து போகும் என்றே எனக்கு தோன்றுகிறது. சிவகார்த்திக்கேயனை பொறுத்தவரை, திரைத்துறையில் அவருக்கு அனுபவம் மிகவும் குறைவு. மூத்த நடிகர்களைப்  பார்த்து அவர் கற்றுக்  கொள்ள வேண்டும் .எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் எல்லாருமே தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றிக்கடனாக படங்களை நடித்துக் கொடுத்துள்ளனர். இன்று ரஜினிகாந்த சூப்பர் ஸ்டாராக உயர்ந்து உள்ளது நடிப்பால் மட்டும் அல்ல. நல்ல உள்ளத்தாலும் நன்றி மறவாத எண்ணத்தாலும் தான். ரஜினி மாதிரி நடித்தால் மட்டும் போதாது எண்ணத்திலும் ரஜினியாக இருக்க வேண்டும்” என்றார் பக்குவமாக.

சிவகார்த்திகேயன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் தேனப்பனிடம் பேசினோம்.” வளரும் நடிகர்களுக்கு உள்ள பிரச்னைதான் தற்போது சிவாவுக்கு. இந்த பிரச்னை குறித்து அனைத்து தரப்பினரும் அழைத்து நேரில் பேசித்தான் முடிவு எடுக்க முடியும். கடந்த வாரமே நேரில் வருவதாகக்  கூறினார். ஆனால் வேலை இருப்பதால் வரமுடியவில்லை. ரெமோ ரிலீஸ்க்கு பிறகு பேச்சுவார்த்தையை வைத்துக்  கொள்ளலாம் என கூறியுள்ளனர். 24-ம்  தேதி அனைத்து தரப்பினரையும் நேரில் வரச் சொல்லி உள்ளோம். அன்று இந்த பிரச்னைக்கு முடிவு கிடைத்து விடும்” என்றார்.

லட்சங்கள் கோடிகள் புரளும் திரைத் துறையில், அரசியலை போன்றே நிரந்தர எதிரிகளும் கிடையாது .நிரந்தர நண்பர்களும் கிடையாது. வணிகமே உறவுகளை தீர்மானிக்கும் துறையில் எல்லா சண்டைகளும், பணத்திலேயே   சரிக்கட்டப்படும் என்பது மட்டும் உண்மை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top