வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

முகுந்த் வரதராஜனாக உருமாறிய சிவகார்த்திகேயன் சாதித்தாரா.? அமரன் விமர்சனமும் வசூலும்

Amaran Movie Review: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் அமரன் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.

நம் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் பயோபிக் படம் தான் இந்த அமரன். இதனால் படத்தின் மையக்கரு என்ன என்பது அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் எந்த சுவாரஸ்யமும் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரும் ரொம்பவே மெனக்கெட்டுள்ளனர்.

அதன்படி முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் பார்வையில் படம் ஆரம்பிக்கிறது. சிறு வயதிலிருந்து ராணுவ வீரராக ஆசைப்படும் முகுந்த் ராணுவத்தில் இணைகிறார். அங்கு கேப்டன், மேஜர் என அடுத்தடுத்த பொறுப்புக்கு வருகிறார்.

அதே சமயம் இந்துவை காதலித்து தடைகளைத் தாண்டி கரம் பிடிக்கும் அவருடைய காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு மகளும் இருக்கிறார். அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்க 44 ரைபிள்ஸ் சீட்டா குழுவின் மேஜராக பதவி ஏற்கிறார்.

அமரன் விமர்சனமும் வசூலும்

அப்போது தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதிகளை கொன்று இறுதியாக முகுந்த் வீர மரணம் அடைகிறார். இதுதான் படத்தின் கதை. இது அனைவரும் அறிந்திருந்தாலும் விசுவலாக அதை பார்க்கும் போது சிலிர்த்து போகிறது.

முகுந்த் வரதராஜன் ஆக மாறி இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய நடிப்பால் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். அவரை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு இந்து கதாபாத்திரத்தில் வாழ்ந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சாய் பல்லவி.

கதை அவருடைய கோணத்தில் நகர்வதால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர் கலக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் உடனான காதல் காட்சிகளும் அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை என அனைத்திலுமே அவர் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார்.

அதேபோல் சென்டிமென்ட் காட்சிகளில் அனைவரையும் கலங்க வைத்திருக்கிறார். இவர்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்களின் தேர்வும் நடிப்பும் கச்சிதமாக இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

அதிலும் சிவகார்த்திகேயன் சாய்பல்லவியின் காதல் காட்சிகள் தேவைக்கு அதிகமாக இல்லாமல் இருப்பதும் கூடுதல் சிறப்பு. உண்மை கதை என்பதால் எந்த இடத்திலும் அதிகப்படியான சாயம் பூசாமல் திரை கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

இதையடுத்து கேமரா கோணம் இசை என எதிலுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு அமரன் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு வருபவர்களின் மனதில் அதன் தாக்கம் இருப்பதே படத்தின் வெற்றியை காட்டுகிறது.

இப்படியாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாளில் 17 கோடி வரை வசூலித்துள்ளது. அதேபோல் உலக அளவில் தற்போது வரை 35 கோடிகள் வசூல் ஆகி இருக்கிறது. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஏற்கனவே பிரீ பிசினஸில் லாபம் பார்த்த நிலையில் அடுத்தடுத்த விடுமுறை நாட்களும் சாதகமாக இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.75/5

- Advertisement -

Trending News