90’s ஹீரோக்களுடனும் மாஸ் காட்டிய சிவாஜியின் 6 படங்கள்.. ரஜினி, கமலை மிஞ்சிய நடிப்பு

நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படுபவர். அவருடைய கம்பீரமான குரலும், திறமையான நடிப்பும் ரசிகர்களை எப்பவும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும்.

சினிமாவில் அவருடைய காலத்துக்கு பிறகும்கூட இளைய தலைமுறையுடன் அவர் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் இளைய தலைமுறைகள் உடன் இணைந்து நடித்து தன்னை நிரூபித்துக் காட்டிய திரைப்படங்களை பற்றி காண்போம்.

ஒன்ஸ்மோர்: நடிகர் விஜய், சிம்ரன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க வந்து பிறகு அவருடைய சொந்த அப்பாவையே மாறிவிடும் கேரக்டரில் அவர் நடித்து இருப்பார். மேலும் ஒரு இளைஞனைப் போல அதில் அவருடைய துறுதுறு நடிப்பும், நடனமும் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது.

படையப்பா: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்து இருப்பார். இப்படத்தில் ஒரு ஊரை கட்டிக்காக்கும் தலைவராகவும், தன தம்பிக்காக சொத்துக்களை விட்டுக்கொடுக்கும் கேரக்டரிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

தேவர்மகன்: கமல்ஹாசன், நாசர், ரேவதி, கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி, கமலுக்கு அப்பாவாக நடித்து இருப்பார். இப்படத்தில் அவர் இறந்து போகும் அந்த காட்சியில் மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் தற்போது இரண்டாம் பாகமாகவும் உருவாக இருக்கிறது.

பசும்பொன்: பிரபு, ராதிகா, சிவகுமார் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ராதிகாவுக்கு அப்பாவாக சிவாஜி நடித்து இருப்பார். கல்யாணமான சில வருடங்களிலேயே கணவனை இழந்த தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒரு பாசக்கார தந்தையாக அவர் நடித்திருப்பார்.

என் ஆசை ராசாவே: கஸ்தூரிராஜா இயக்கத்தில் முரளி, ராதிகா ஆகியோருடன் இணைந்து சிவாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமிய கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவாஜி மிகச் சிறப்பாக நடித்திருப்பார். அதிலும் இறுதிக் காட்சியில் அவர் கரகம் ஆடும் அந்த காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது.

பூப்பறிக்க வருகிறோம்: இப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து அஜய், மாளவிகா, ரகுவரன், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி இப்படத்தில் நடித்திருப்பார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாவிட்டாலும் சிவாஜியின் கதாபாத்திரம் ரசிக்கும் படியாக அமைந்தது.

Next Story

- Advertisement -