ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போய் யோசிக்கும் டைரக்டர்களால் குட்டிச் சுவராகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. ஸ்கிரிப்ட்டில் முன்னரே எழுதி வைத்து எழுதியதை படமாக்கினால் அப்படத்தை அதிக பட்சம் 60 நாட்களுக்குள் எடுத்து முடித்துவிடலாம். ஆனால் போகிற இடத்திலெல்லாம் யோசித்து, தோன்றும் போதெல்லாம் துளையிட்டு ஒரு படத்தை சின்னாபின்னமாக்கும் சின்னப் பையன்கள் பெருகிவிட்டதால், தமிழ்சினிமா அதல பாதாளத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது. அப்படிதான் ஆகிவிட்டதாம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் நிலைமையும். எப்படி?

இதுவரை ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த புட்டேஜ், இரண்டு படங்களுக்கு தேவையான அளவுக்கு வளர்ந்து நிற்கிறதாம். இதில் எதை நறுக்குவது? எதை வைத்துக் கொள்வது? என்று புரியாமல் எடிட்டர் தடுமாற… ஏன் படத்தையே இரண்டா பிரிச்சு, பார்ட்1 பார்ட் 2 ன்னு ரிலீஸ் பண்ணக் கூடாது? என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

கடைசியில் ஒவர் செலவில் ரெண்டு மாங்காய் என்று மகிழ்ந்த அப்படத்தின் தயாரிப்பாளர், நீங்க சொன்ன மாதிரியே இரண்டு பாகங்களாக பிரித்து இரண்டு தேதியில் ரிலீஸ் பண்ணலாம் என்று கூறியிருக்கிறாராம். இதற்கப்புறம் சிம்பு சும்மாயிருப்பாரா? இரண்டு படத்துக்கான சம்பளத்தை எண்ணி வைங்க என்று பஞ்சாயத்து கூட்ட மாட்டாரா? இந்த கேள்விகளையும் சமாளிக்க திட்டம் போட்டு வருகிறாராம் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

படத்தை விட சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் ஒண்ணு வரப்போகுதுடோய்….