மக்களுக்கு நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் தரும் ஒரு அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என்று சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது போராட்டக் களம் மாறியுள்ள சூழலில் சிம்பு கூறியிருப்பது, “யார் சொன்னாலும் மாணவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இது அவர்களுடைய போராட்டம். உணர்வோடு இத்தனை நாளாக போராடி வருகிறார்கள். வன்முறையில் ஈடுபட வேண்டும் என்றால் என்றைக்கோ வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், இத்தனை நாள் வன்முறையில் ஈடுபடவில்லை.

சிலர் வெற்றி கிடைத்துவிட்டது என்று சொன்னாலும், அதை நாம் அவர்களிடம் திணிக்க முடியாது. அவர்கள் எங்கள் தரப்பில் வக்கீல்களிடம் பேசிவிட்டு போகிறோம் என்று சொன்னது நியாயமாக தான் இருந்தது. சட்டம் கொண்டு வந்தவுடன் இன்னும் ஏன் போராடுகிறீர்கள் என்பது காவல்துறையின் வாதம். காவல்துறையும் எடுத்தவுடனே தடியடியோ எதுவும் நடத்தவில்லை. காவல்துறையும் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்கலாம் என நினைத்தேன்.

வன்முறையில் ஈடுபட மாணவர்களுக்கு அவசியமில்லை. இப்போது மாணவர்கள் எடுக்கும் முடிவுக்கு தான் அனைவருக்குமே கட்டுப்பட்டு ஒப்புக் கொள்ள வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதால் பெண்கள், குழந்தைகள் யாருக்குமே பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலே இப்போராட்டத்தை கைவிட வேண்டும்..

மாணவர்கள் தற்போது அமைதியாக இருக்கலாம். அரசாங்கமும் நமக்கு ஒத்துழைப்பு அளித்து ஒரு விஷயத்தை செய்துள்ளார்கள். இந்நேரத்தில் நரேந்திர மோடிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உடனடியாக மக்களுக்கு நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் தரும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, தமிழகத்தில் நடக்கும் இந்த சூழலை நிறுத்துங்கள். உங்களை நாங்கள் நம்புகிறோம்.

மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் மட்டுமே உடனே கலைந்து சொல்வார்கள். வேறு எப்படியும் இதை நிறுத்த முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.