பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனின் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் ரிலீஸான பிரேமம் படம் கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் சூப்பர் ஹிட்டானது. தமிழ் ரசிகர்கள் மலர் டீச்சரை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.

தெலுங்கில் ஸ்ருதி ஹாஸன், நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்யப்பட்ட பிரேமமும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அல்போன்ஸ் சிம்புவை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அல்போன்ஸ் சிம்புவை சந்தித்து கதை சொன்னாராம்.

சிம்புவுக்கு கதை பிடித்து இந்த படத்தை நாம் நிச்சயம் பண்ணுகிறோம் என்று அல்போன்ஸிடம் தெரிவித்தாராம். நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அல்போன்ஸ் சிம்புவுடன் கைகோர்க்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.