ஜனநாயகத்துக்கு அவமானகரமான நாட்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக தெரிவித்துள்ளார் சித்தார்த்.

தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது.

காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சித்தார்த், “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்… நாம் இப்போது எண்ணிக் கொண்டிருப்பது இதுதான். திமுக-வினர் நன்றாக நடந்து கொண்டார்கள். எதிர்க்கட்சியாக நீங்கள் இந்த விஷயத்தில் மக்களுக்கு கடன்பட்டுள்ளீர்கள்.

தமிழக சட்டப்பேரவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் கூட கண்டு, கேட்டு அறிந்து கொள்ளட்டும். குழந்தைகள் இதைப் புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள். ஜனநாயகத்துக்கு அவமானகரமான நாட்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.