பெங்களூரு,

‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் நடித்த நடிகை ஸ்ருதியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட்டை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

கன்னட நடிகை ஸ்ருதி

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதி ஹரிகரண். இவர், கன்னடத்தில் தாரக், யுர்வி, ஹேப்பி நியூ இயர், விஸ்மயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே‘ என்ற படத்திலும், மலையாள படங்களிலும் நடிகை ஸ்ருதி நடித்திருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ருதியின் புகைப் படங்களை ஆபாசமாக சித்தரித்து சில மர்மநபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள். இதுபற்றி அறிந்த நடிகை ஸ்ருதி அதிர்ச்சியும், ஆதங்கமும் அடைந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையில் பெங்களூரு போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு நடிகை ஸ்ருதி வந்தார். பின்னர் அவர், போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட்டை சந்தித்து தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் வெளியிட்டு இருப்பதாகவும், அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். அந்த புகாரை போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட் பெற்றுக் கொண்டார்.

மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை

இந்த நிலையில், போலீஸ் கமி‌ஷனரின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.