பெர்பார்மென்ஸ் குறைவு என்ற பெயரில் மென்பொருள் நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு அனுப்பப்படுபவர்களில் அதிகம் பேர் நடுத்தர வயதுள்ள சீனியர் அதிகாரிகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனங்கள் மந்த நிலையை சந்தித்து வருகின்றன. இதனை தொடர்ந்து பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை லே ஆஃப் எனப்படும் வேலை இழப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த முயன்று வருகின்றன.
ஏற்கனவே காக்னிசண்ட்,விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்கள் பலரை வீட்டுக்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஐந்தாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டெக் மகேந்திரா, தனது நிறுவன ஊழியர்களில் கணிசமானவர்களுக்கு லே ஆஃப் கொடுக்க முடிவெடுத்துள்ளது. வேலையில் செயல்பாடு திருப்தியில்லை (பெர்பார்மென்ஸ்) என்ற வகையில் சில நூறு பேருக்கு லே ஆஃப் கொடுக்க டெக் மகேந்திரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகம் படித்தவை:  அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் இடம் பிடித்த ஒரே இந்தியர்

இப்படி இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் அறிவித்து வரும் இந்த வேலை நீக்க அறிவிப்பில், அதிகம் பாதிக்கப்படுவது சீனியர் அதிகாரிகள்தான் என தெரியவந்துள்ளது. சீனியர் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்குவதற்கு பதிலாக, அந்த சம்பளத்தில் இரண்டு புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்து சம்பளம் அளிக்கலாம் என தொழில்நுட்ப நிறுவனங்கள் கருதுகின்றன. பிராஜெக்ட் இல்லாதபோது உயர் அதிகாரிகளுக்கு எதற்கு அதிக சம்பளம் என அந்த நிறுவனங்கள் நினைக்கின்றன.

அதிகம் படித்தவை:  இருமுகன்,தேவி படங்களை கைப்பற்றிய ஒரே நிறுவனம்

மேலும் சீனியர் ஊழியர்கள் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் என்பதால், அவர்களுக்கு அனைத்து பணிப்பயன்களை வழங்க வேண்டிய சூழல் உள்ளது. அதே நேரத்தில் புதிய ஊழியர்களிடம், ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் இந்த பணிப்பலன்களை அளிக்கத் தேவையில்லை என அந்த நிறுவனங்கள் கணக்கு போடுகின்றனவாம்.

தொடர்ந்து தொழில்நுட்ப உலகில் மந்த நிலை நீடித்து வருவதால், மற்ற முன்னணி மென்பொருள் நிறுவனங்களும் இது போன்ற வேலை நீக்க நடவடிக்கைகளை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. இதிலும் நடுத்தர வயதுள்ள சீனியர் அதிகாரிகள்தான் குறி வைக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.