fbpx
Connect with us

Cinemapettai

‘ஐ விட்னஸ்’ சண்முகநாதன்! – சசிகலாவுக்கு ‘355’ செக் வைக்கும் ஆளுநர்

News | செய்திகள்

‘ஐ விட்னஸ்’ சண்முகநாதன்! – சசிகலாவுக்கு ‘355’ செக் வைக்கும் ஆளுநர்

‘தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்’ என அறிவித்துவிட்டார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ‘அரசியல் சூழல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினாலும், நேற்றைய சந்திப்பில் ஹைலைட்டே சண்முகநாதனின் ஸ்டேட்மெண்ட்தான்’ என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் நிலை பற்றி, தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று மாலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், மிகுந்த உற்சாகத்தோடு வெளியில் வந்தார். ‘தர்மம் வெல்லும்’ என மீடியாக்களிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். அவரது உற்சாகத்திற்கான காரணத்தை விளக்கிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், “இந்திய அளவில் சசிகலா மீதான எதிர்ப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் நிலைதான் இந்திய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. ‘எந்தக் கிரிமினல் வழக்குகளும் இல்லாத பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று மாலை ஆளுநரை சந்திக்க பன்னீர்செல்வம் சென்றபோது, அவைத் தலைவர் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரும் உடன் சென்றனர்.

‘எப்படி எல்லாம் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள்?’ என்ற கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார் பன்னீர்செல்வம். அதன்பிறகு, எம்.எல்.ஏக்களில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; அவர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்’ என்ற கோரிக்கை மனுவையும் கொடுத்தார். அப்போது அருகில் இருந்த சண்முகநாதன் எம்.எல்.ஏவை அறிமுகப்படுத்தினார் பன்னீர்செல்வம். ‘எம்.எல்.ஏக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த பேருந்தில் இருந்து தப்பி வந்தது குறித்தும், சசிகலாவின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள கூலிப்படை பற்றியும்’ அதிர்ச்சி விலகாமல் விளக்கினார் சண்முகநாதன். தமிழக அரசியல் சூழல்களுக்கான நேரடி சாட்சியாக சண்முகநாதன் இருக்கிறார். அவர் கூறிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டார் ஆளுநர். ‘மத்திய அரசின் கவனத்திற்கு உண்மை நிலவரத்தைக் கொண்டு செல்ல சண்முகநாதனின் வாக்குமூலமே போதுமானது’ என்ற முடிவுக்கு ஆளுநர் மாளிகை வந்துவிட்டது. இப்போது, ‘ஆளுநரே அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்’ என மத்திய அரசு கூறிவிட்டது. ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றார் நிதானமாக.

‘ஆளுநர் என்ன முடிவை எடுப்பார்?’ என பா.ஜ.க வட்டாரங்களில் விசாரித்தோம். “சசிகலாவும் பன்னீர்செல்வமும், ‘தங்களுக்குத்தான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது’ எனக் கூறிவருகின்றனர். நேற்று எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார் சசிகலா. இவற்றை வாங்கி வைத்துக் கொண்டார் ஆளுநர். தற்போதுள்ள சூழலில், எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றுதான் ஆளுநர் விரும்புகிறார். சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாலும், ‘சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக’ தமிழக பா.ஜ.க நிர்வாகிகள், மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர். சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, ஆட்சியைக் கலைக்கும் முடிவை காங்கிரஸ் தரப்பில் இருந்தும் வலியுறுத்துகின்றனர்.

புதிதாக தேர்தலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஆறு பேர் விரும்பவில்லை. தேர்தல் வந்தால், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் விரும்புகிறார். எனவே, 356-ஐ பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லை. அதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 355-ஐ பயன்படுத்தி, சட்டசபையை மௌனமாக்கிவிட்டு, எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் முடிவை ஆளுநர் எடுக்கலாம். இதனால், எம்.எல்.ஏக்களுக்கு பதவி பறிபோவதற்கும் வாய்ப்பில்லை. இதன்பிறகும் தனிப் பெரும்பான்மையை யாரும் நிரூபிக்கவில்லையென்றால், 356 என்ற ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்தை பா.ஜ.க பயன்படுத்தும். இதை உணர்ந்துதான் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஆளுநர் எந்த சட்டவிதியைப் பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்துத்தான், அ.தி.மு.கவின் எதிர்காலம் இருக்கிறது” என்றார் விரிவாக.

“எம்.எல்.ஏக்களைக் கட்டுப்பாட்டில் இருந்து விட்டுவிட்டால், அவர்களை பன்னீர்செல்வம் தரப்பு வளைத்துவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் சசிகலா. அதற்காகத்தான் எம்.எல்.ஏக்களை பணயக் கைதிகளாக அடைத்து வைத்திருக்கிறார். ‘அவர்களை சுதந்திரமாக உலவவிட்டால், ஓ.பி.எஸ் பலம் பெற்றுவிடுவார்’ என உறுதியாக நம்புகிறார். தங்கள் நிலையை எண்ணிக் கதறும் எம்.எல்.ஏக்கள், ‘ இதற்குத் தேர்தலில் ஜெயிக்காமலேயே இருந்திருக்கலாம்’ என வேதனையில் குமுறுகின்றனர். ‘அரசியமைப்புச் சட்டப் பிரிவு 355-ஐ பயன்படுத்துதே சரியானதாக இருக்கும்’ என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க. ‘சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை வரலாம்’ என்ற தகவலால் அச்சத்தில் உறைந்திருக்கிறார் சசிகலா. அரசியல் சூழல்களை உணர்ந்து அப்போலோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கிறார் ம.நடராசன். கட்சித் தொண்டர்களின் நிலைதான் கவலை அளிக்கிறது” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து ஒரு மாநிலத்தை, மத்திய அரசு காப்பதற்கு அரசியமைப்புச் சட்டப் பிரிவு 355 வகை செய்கிறது. ‘ மாகாணங்களின் குரல் வளையை நெரிக்கும் விதி’ என அரசியல் வல்லுநர்கள் காலம்காலமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். அ.தி.மு.கவின் குரல் வளையை நெரிக்கும் அதிகார சத்தத்தில், இந்த விதிகளைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top