இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஆதரவாக, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், ஆஸ்திரேலியமுன்னாள் வீரர் ஷேன் வார்ன்.

ஐபிஎல் தொடரின் 10-வது சீசன் அமர்க்களமாய் நடந்துவருகிறது. இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இதுவரை தோனி விளையாடிய ஐந்து போட்டிகளில், 61 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதுவரை, இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே அவர் விளாசியுள்ளார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் தோனியை விமர்சித்து பலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். மேலும், புனே அணியின் உரிமையாளரும் தோனியின் ஆட்டத்திறனை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில்,’ தோனி எதையும் யாருக்காகவும் நிரூபிக்கத் தேவையில்லை. அனைத்து தர போட்டிகளிலும் அவர் சிறந்த வீரர். தோனி ஒரு மிகச் சிறந்த தலைவர்’ எனக் கூறியுள்ளார்.