தொடக்கத்தில் அதிமுக.,வின் இரண்டு அணிகள் இணைப்புக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை என்று கூறிய ஓ.பி.எஸ், அடுத்த நாளே இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார். அவை, அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் தலையீடு அறவே இருக்கக் கூடாது அவர்களை கூண்டாக வெளியேற்றவேண்டும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்தார். இந்த நிபந்தனைகளை எடப்பாடி தரப்பு ஒருவேளை ஏற்றுக்கொண்டாலும் இறுதியாக தொண்டர்களின் கருத்தை கேட்டே முடிவு செய்யப்படும் என்று புது குண்டை தூக்கி போட்டார்.

இரண்டு அணிகள் இணைப்பில் உள்ள சிக்கல்கள் என்ன. ஏன் இந்த இழுபறி. இதுகுறித்து இரண்டு அணிகள் தரப்பிலும் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள் என்ன என்பதை காண்போம்.

  1. சசிகலா முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே அமைச்சர்கள் கூடி அவரை நீக்க முடியாது. ஒன்று சசிகலாவே தனது ராஜினாமாவை சமர்பிக்க வேண்டும், அல்லது தேர்தல் ஆணையம் அவரது நியமனத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
  2. தற்போதைய சூழலில் சசிகலா நினைத்தால் மட்டுமே டி.டி.வி. தினகரனை துணைப்பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க முடியும். பொதுக்குழுவை கூட்டும் தைரியம் எடப்பாடி அணிக்கு நிச்சயமாக இல்லை.
  3. ஒருவேளை இரு அணிகளின் இணைப்பு நடந்தால், பொதுச்செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கும், முதல்வர் பதவியில் எடப்பாடியே தொடர்வது என்றும் முன்னதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதை தொண்டர்களே முடிவு செய்வார்கள், அதனை தொண்டர்களிடம் விட்டுவிடுங்கள், பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்ட முதல்வர் பதவியை மீண்டும் அவருக்கே திருப்பி தாருங்கள் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிரதாம்.
  4. பொதுச்செயலாளர் தேர்வை தொண்டர்களிடம் விட்டு விட்டால் ஓ.பி.எஸ் அணிக்கே வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதால், முதல்வர் பதவிக்கு மட்டுமே ஓ.பி.எஸ் அணி தற்போது குறி வைப்பதாகக் கூறப்படுகிறது.
  5. வெறும் 11 எம்.எல்.ஏக்கள்,  12 எம்.பிக்கள்,  2 மாவட்ட செயலாளர்களை கைவசம் வைத்திருக்கும் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை எப்படி கொடுக்க முடியும் என்று எடப்பாடி அணியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
  6. ஆனால், ஓ.பி.எஸ் தரப்போ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒரே ஒருவர் ஓ.பி.எஸ் தான்.   எனவே அவரை முந்நிறுத்தியே எவ்வித முடிவும் எடுக்கப்பட வேண்டும். தற்போது நடக்கும் ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என்கிறது ஓ.பி.எஸ் தரப்பு.
  7. ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கட்டும், எடப்பாடி துணை முதல்வராக இருக்கட்டும். இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று கறாராக சொல்லுகின்றனர் ஓ,பி,எஸ் அணியினர்.
  8. இவைகள், எல்லாவற்றையும் தாண்டி, ஆதரவாளர்களுக்கும் பதவி தொடர்பான நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தனை தடைகளையும் தாண்டி இரண்டு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே தினகரன் பகிரங்கமாக தாம் விலகி இருப்பதாக அறித்தார் என்று கூறப்படுகிறது. இரண்டு அணிகள் நடத்தும் இத்தனை கூத்துக்களையும் உளவுத்துறையின் மூலமாக உடனுக்குடன் அறிந்து வருகிறது மத்திய அரசு. இரண்டு அணியினரும் ஒருங்கிணைந்த முடிவை எட்டாவிடில், இரண்டு நாட்களில் இருதரப்பையும் டெல்லிக்கு அழைத்து ஒரு “புளூ பிரின்ட்டை” கையில் கொடுத்து, அதன்படி தான் இருதரப்பும் நடக்க வேண்டும் என்று கூறி ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வார்னிங் கொடுத்து அனுப்ப உள்ளது.