தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியன் செந்தில். கவுண்டமணியுடன் இவர் சேர்ந்து செய்த காமெடிகள் இன்றும், என்றும் மறக்க முடியாதவை. இப்போதும் டிவி.க்களில் இவரது காமெடிகள் வந்தால் மக்கள் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள். வடிவேலு, சந்தானம், சூரி… என அடுத்தடுத்து ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் வந்துவிட்டதால் செந்திலுக்கான வாய்ப்பு குறைந்து போனது. இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது சூர்யா நடித்து வரும் ‛தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் செந்திலுக்கு நேற்று 66வது பிறந்தநாள். இதையொட்டி, ‛தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பில் செந்திலின் பிறந்தநாள் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவும் கலந்து கொண்டனர். செந்தில் நடித்த காமெடிகளில் என்றும் மறக்க முடியாதது கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழம் காமெடி, ஆகையால் செந்தில் பிறந்தநாளுக்கு வாழைப்பழம் வடிவிலான கேக் வரவழைத்து கொண்டாடினர்.