அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு, உலகப் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால் சென்செக்ஸ் இன்று 30,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2015ல் செக்செக்ஸ் 30,024 புள்ளிகளை தொட்டு இருந்தது. அதற்குப் பின்னர் முதன் முறையாக இன்று செக்செக்ஸ் 30,071 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு உயர்வு, கடந்த மூன்று மாதங்கள் பொதுத்துறை நன்றாக இயங்கி லாபம் ஈட்டி இருப்பது, நிகர வருமானம் அதிகரித்து, பங்குகளின் மதிப்பு அதிகரித்து இருப்பது, சந்தையில் பணபுழக்கம் அதிகரித்து இருப்பது, கூடுதலாக உலகப் பொருளாதாரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருப்பது என்று பல்வேறு காரணங்கள் செக்செக்ஸ் உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இன்று காலை வர்த்தகத்தின் துவக்கத்தில் குறியீட்டு எண் 100 புள்ளிகள் அதிகரித்து, சென்செக்ஸ் 30,043.65 புள்ளிகளைத் தொட்டது.

நிப்டி முதன் முதலாக நேற்று 9,300 புள்ளிகளைத் தொட்டது. இதைத் தொடர்ந்து இன்று 9,343.15 புள்ளிகளைத் தொட்டது. பின்னர் 9,332.25 என்ற அளவில் வர்த்தகம் செய்தது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் செக்செக்ஸ் வளர்ச்சி 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் 19 சதவீத லாபத்தை ஈட்டியுள்ளனர். வரும் 2018ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகம் நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பங்குச் சந்தை வளர்ச்சி நல்ல முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் விப்ரோ 2.28 சதவீத வளர்ச்சியையும், மகேந்திரா&மகேந்திரா 1.15 சதவீத வளர்ச்சியையும், ஆக்சிஸ் வங்கி 1.02 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளன.