இரண்டாம் உலகம் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு தனது மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்திற்கு கதை எழுதினர் செல்வராகவன். அதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கியவர், அந்த படத்தின் இறுதிகட்ட வேலைகளில் ஈடு பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்தபடியாக அவர் சந்தானம் நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்குபவர், அதற்கடுத்து விஜய் 62வது படத்தை இயக்குகிறார் என்றொரு செய்தியும் கோலிவுட்டில் உலவிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தனது அடுத்த படங்கள் குறித்து எந்தவித திட்டவட்டமான பதிலும் வெளியிடாத செல்வராகவன், தான் ஏற்கனவே இயக்கிய சில படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆர்வம் தனக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அந்தவகையில், தனது தம்பி தனுஷ் நடிப்பில் இயக்கிய புதுப் பேட்டை, கார்த்தி நடிப்பில் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கூறும் செல்வராகவன். அந்த படங்களுக்கான ஸ்கிரிப்ட்டும் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.