டெல்லி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அஸ்வினி குமார் உபத்யாய், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என  மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இந்தியை கட்டாயமாக்கவில்லை என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள், சந்திராசூட், சஞ்சய் கிசன் கவுல், ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

 ” நீங்கள் ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதி.

உங்கள் கட்சி தான் ஆட்சி செய்கிறது. நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உங்களால் ஏன் இதனை அமல்படுத்தமுடியவில்லை.

இந்தி பேசுபவர்களான நீங்கள், உங்கள் மொழியை அனைத்து மாநில மக்களும் படிக்க வேண்டும் என்றால், மற்ற மாநில மக்களும் எங்கள் மொழியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் படிக்க வேண்டும் என கேட்கமாட்டார்களா? சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க நாளை ஒரு மனு தாக்கல் செய்யப்படும். அடுத்ததாக பஞ்சாபியை கட்டாயமாக்க மற்றொரு மனு தாக்கல் செய்யப்படும்… 

அரசு தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். உங்களது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்”

என நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் சார்பாக நான் மனுத்தாக்கல் செய்யலாமா என கேட்டபோது, அதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.