தமிழ்சினிமா மார்க்கெட்டில், ஜல்லிக்கட்டு காளை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஜய் ஆன்ட்டனி. அவரது விஸ்வரூப வளர்ச்சி கண்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள் சக ஹீரோக்கள். தனக்கு என்ன வருமோ, அதை தாண்டாமல் முயன்று, துவளாமல் வெற்றி நடை போடும் அவரது மார்க்கெட் சீக்ரெட், மற்ற நடிகர்களால் கூட கணிக்கவே முடியாதது!

இந்த மாதம் 24 ந் தேதி திரைக்கு வரவிருக்கும் எமன், பிச்சைக்காரன் படம் போல பெரும் கலெக்ஷன் ஈட்டும் என்கிறார்கள் கோடம்பாக்க ஜோசியர்கள். ஏன்? கதை அப்படி!

முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். விஜய் ஆன்ட்டனியை ஹீரோவாக்கியவரே இவர்தான். முதல் படமான நாம், ஜீவா சங்கரின் தொழில் நேர்த்திக்கு அடையாளம். அப்போதே இந்தக்கதையை விஜய் ஆன்ட்டனியிடம் கூறினாராம். இப்ப நான் இந்தக்கதையில் நடிச்சா அது சரியா இருக்காது. எனக்குன்னு ஒரு வேல்யூ வரும். அப்போது பண்ணலாம் என்று கூறியிருந்தாராம் அவர்.

அதான் பிச்சைக்காரன் அந்த அந்தஸ்த்தை கொடுத்திருச்சே? எமன் படத்தில் அரசியல் கலவர நிலவரங்களை முடிந்தவரை இறங்கி அடித்திருக்கிறாராம் ஜீவா சங்கர். இன்னும் சொல்லப் போனால், கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஐந்து வருஷத்திற்கு முன்பே கணித்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இவர்.

அரசியல்ல எப்பவும் கூடவே இருப்பவங்கதான் குழி பறிப்பாங்க. இந்தப்படமும் அதைதான் சொல்லுது என்றார் விஜய் ஆன்ட்டனி. முக்கியமான ரோலில் மம்பட்டியான் தியாகராஜன் நடித்திருக்கிறார். விஜய் ஆன்ட்டனிக்கு ஜோடி மியா ஜார்ஜ்.

“முதன் முறையா ஒரு பெரிய ஹீரோயின் கூட இப்பதான் ஜோடி சேர்றேன்” என்றார் விஜய் ஆன்ட்டனி. இன்னைக்கு உங்களுக்கு இருக்கிற மார்க்கெட் நிலவரத்திற்கு நயன்தாராவே வருவாங்களே ஐயா?