நாளை நடைபெறவுள்ள நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்துக்கு, இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 20-ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பாக மாபெரும் மெளன அறவழிப் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளார்கள். இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள அறிவுறுத்துவோம் என துணைத் தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், இப்போராட்டம் குறித்த அறிவிப்புக்கு போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை #saynotonadigarsangam என்ற ட்விட்டர் ஹெஷ்டேக்கில் பதிவு செய்து வருகிறார்கள்.

இதில் “தாமதமான போராட்டம் எங்களுக்குத் தேவையில்லை”, “போராட வேண்டும் என்றால் எங்களோடு மெரினாவில் வந்து உட்காருங்கள்”, உண்மையா போராடனும்னு நனைச்சிருந்தா இந்நேரம் களத்துல நின்றுக்கனும்” என்று பலரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த ஹேஷ்டேக் சென்னையில் ட்ரெண்ட்டாகி வருகிறது.