ஆதிக்க அரசியலும் அராஜகமும்.. சசிகுமாரின் நந்தன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Nandhan Movie Review: வித்தியாசமான நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சசிகுமார் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கும் படம் தான் நந்தன். ஆர் சரவணன் இயக்கத்தில் சசிகுமார் உடன் இணைந்து சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த போது படத்தின் கதைகளம் எப்படி இருக்கும் என தெரிந்தது. அதேபோல் படத்தை பார்த்த பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நந்தன் எப்படி இருக்கிறது என ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

கதை கரு

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இப்படம். ஆதிக்க வர்க்கமாக அதிகாரம் செலுத்தும் பாலாஜி சக்திவேல் பல வருடங்களாக ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். செல்வாக்கு மிக்க அவர் எந்த போட்டியும் இன்றி தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.

ஆனால் திடீரென அந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இதனால் ஆதிக்க வர்க்கத்தினர் கொதித்து போகின்றனர். ஆனால் நமக்கு விசுவாசியாக சொல்வதை கேட்பது போல் அடங்கியிருக்கும் ஒருவரை தலைவர் ஆக்கி நம் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளலாம் என பிளான் போடுகிறார் பாலாஜி சக்திவேல்.

அதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் அம்பேத்குமார் ஆக வரும் சசிகுமார். பாலாஜி சக்திவேல் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட நபரான அவர் போட்டியின்றி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் ஆதிக்க அரசியலும் அராஜகமும் தான் படத்தின் கதை.

நிறை குறைகள்

இதில் சசிகுமார் என்ன ஆனார்? ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி கொடுத்தாரா? அவருக்கான உரிமை மீட்டெடுக்கப்பட்டதா? போன்ற பல கேள்விகளுக்கு நந்தன் பதிலளிக்கிறது. காலம் காலமாக நடந்து வரும் சம்பவத்தை தான் இயக்குனர் சொல்ல முயற்சித்துள்ளார்.

அதற்கு கச்சிதமாக பொருந்தி போகிறார் சசிகுமார். விசுவாசியாக அழுக்கு துணியோடு இருப்பதும் ஊர் தலைவராக வெள்ளை வேட்டி சட்டையில் வரும் போதும் வித்யாசத்தை காட்டுகிறார். அதேபோல் ஊருக்கு முன் அவமானப் படும் இடங்களிலும் கை தேர்ந்த நடிகர் என நிரூபிக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக வில்லத்தனம் செய்யும் பாலாஜி சக்திவேலின் உடல் மொழியும் நக்கல் நையாண்டி பேச்சும் பொருத்தமாக இருக்கிறது. அதேபோல் சசிகுமாரின் மனைவியாக வரும் சுருதி யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

இப்படத்திற்குப் பிறகு அழுத்தமான கதாபாத்திரங்கள் இவரை தேடி வரும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை சிறப்பாக கொடுத்துள்ளனர். மேலும் இயக்குனர் சில இடங்களில் அழுத்தமான அரசியல் வசனங்கள் மூலம் கைத்தட்டலை பெறுகிறார்.

அதே சமயம் சில காட்சிகளை உணர்வு ரீதியாக சொல்வதற்கு தவறி இருக்கிறார். பலவீனமான காட்சிகளும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வும் பெரும் பின்னடைவாக இருக்கிறது. இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5

சசிகுமாரின் நந்தன் வெற்றியா.?

- Advertisement -spot_img

Trending News