சசிகுமார் கடந்த ஏழு ஆண்டுகளாகவே அவர் தயாரித்துவரும் படங்களுக்கு ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தயாரித்த ‘தாரை தப்பட்டை’ படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இது பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இதனால், ‘கொடிவீரன்’ படத்தை வரும் 30-ம் தேதி வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கும் அன்புச்செழியன் தடை ஏற்படுத்தினார்.

அன்புச்செழியனின் அடுத்தடுத்த மிரட்டலுக்கு பயந்த சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அசோக்குமார், எழுதிய கடிதத்தில் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சசிகுமார் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரைத் தேடியும் வருகின்றனர்.

அசோக் தற்கொலை பற்றி மேல் விசாரணை நடைபெற்றது. அதற்குமுன் செய்தியாளர்களிடம் பேசியனார் சசிகுமார், அவரிடம் அன்புச்செழியனுக்கு ஆதரவாக உள்ளவர்கள் பற்றி கேட்கப்பட்டது.

“நான் ஒருவனை இழந்துவிட்டு நிற்கின்றேன், எதுவும் சொல்ல விரும்பவில்லை. அசோக் குமாரின் கடிதத்தை படித்திருப்பீர்கள். அசோக் மனதில் இருந்ததை என்னிடம் கூட கூறாமல் இருந்துள்ளார். என் படத்திற்கு ரெட் கார்டு போட்டுவிட்டார்கள், படம் விற்றால்தானே காசை திருப்பி கொடுக்க முடியும்” என சசிகுமார் கூறியுள்ளார்.

kodiveeran

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சசிகுமார் கூடுதல் ஆவணங்களை அளித்து, சுமார் இரண்டு மணி நேரம் துணை ஆணையர்  கேள்விகளுக்கு பதிலளித்தார். துணை ஆணையரிடம் விளக்கமளித்த பின் சசிகுமார் அளித்த பேட்டி:

‘அன்புசெழியன் மீது இன்னும் பல்வேறு புகார்கள் வரும். எனக்கும் அசோக்குமாருக்கும் இடையேயான பழக்க வழக்கங்கள் குறித்து துணை ஆணையரிடம் விரிவாக விளக்கமளித்தேன். அன்புசெழியனுக்கு ஆதரவாக திரைத்துறையினர் ஒரு சிலர் கருத்து கூறுவது அவர்களது தனிப்பட்ட கருத்து.நான் துணை ஆணையரிடம் நடந்த சம்பவங்களை சுமார் இரண்டு மணி நேரம் விளக்கமாக தெரிவித்தேன்.’

அப்பொழுது  அவருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் திரு ஞானவேல்ராஜாவும் உடனிருந்தார்.