அதிமுகவை விட்டு சசிகலாவை நீக்குவதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக மோதல் வெடித்து வியாபித்துக் கொண்டிருக்கிறது.

இன்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனை கட்சியை விட்டு நீக்கி சசிகலா உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், சசிகலா கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் விரைவில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் மதுசூதனன் அறிவித்தார்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன் மேலும் கூறுகையில் சசிகலாவை நாங்கள் நீக்கி விட்டோம். அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற விதியே இல்லை.

விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும். அடிப்படைத் தொண்டர்கள் கூடி புதிய. பொதுச் செயலாளரை தேர்வு செய்வார்கள். தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார் மதுசூதனன். மதுசூதனன் அறிவிப்புக்கு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரத்துடன் கை கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.