என் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நடிக்க தகுதியான நடிகை இவர் தான் என நடிகை சரோஜா தேவி தெரிவித்து இருக்கிறார்.

கன்னட பைங்கிளி என செல்லமாக அழைக்கப்படும் சரோஜா தேவி திரைத்துறையில் 50 வருடமாக இருந்து வருகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய தமிழ் கிங் மேக்கர்களின் ஜோடியாக பல படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர்களை விட சரோஜா தேவிக்கு ஒரு காலத்தில் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. 2008ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் என்ற இந்திய அரசின் தேசிய விருதை பெற்றார். தமிழில் கடைசியாக `ஆதவன்’ படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் இவர் நடிக்கவில்லை.

தனது சொந்த ஊரான பெங்களூரில் செட்டில் ஆகி விட்ட சரோஜா தேவி தற்போது, கன்னடத்துல புனித் ராஜ்குமார் படத்துல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தன் சினிமா வாழ்க்கை, சக நடிகை நட்புகள் ஆகிய சில விஷயங்கள் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து இருக்கிறார்.

இதுகுறித்து, அப்பேட்டியில் பேசிய பைங்கிளி, நான் கதாநாயகியாக இருந்த காலத்துல ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருந்தது. தற்போது இருக்கும் நடிகைகளுக்கு அந்தக் கட்டுபாடுகள் இருப்பது போல தெரியவில்லை. அதிகம் பேஷனுக்காவே நேரத்தை செலவழிக்கிறார்கள். அதைப்போல, என் காலத்தில் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்தோம். இந்த தலைமுறை நாயகிகளும் அதையே பின்பற்றுகிறார்கள். அது மட்டுமே, இந்த காலத்திற்கு எங்கள் காலத்திற்கும் உள்ள ஒற்றுமையாக கருதப்படுகிறது.

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் உருவாகிறது. என் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாம்னு சில நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், என் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. ஏனெனில், நான் சினிமாவுக்குள் வந்ததுல இருந்து இன்று வரை எந்த ரகசியமும் என்னிடம் இல்லை. என் கணவர் யார், குழந்தைகள் யார் என எல்லாமே ரசிகர்களுக்கு தெரிந்து தான் நடைபெறுகிறது. மற்றபடி, எனது கதாபாத்திரத்தில் பெரிய சவால் எல்லாம் கிடையாது. நடிக்கத் தெரிந்த ஒரு நல்ல நடிகை இருந்தாலே போதும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

அட! அப்போ அடுத்த வரலாற்று படம் ரெடியா?