Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 62வது படத்திற்கு சர்கார் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தளபதியன்ஸ் புது அர்த்தத்தை இணையத்தில் உலாவ விட்டு இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் கிங் மேக்கர் விஜய். எந்த இயக்குனருக்கும் இவ்வளவு பெரிய இடத்தை கொடுத்தது இல்லை. அதை அடைந்தவர் இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படத்தின் பெயர் துப்பாக்கி. ராணுவ அதிகாரியாக அப்படத்தில் விஜய் மாஸ் காட்டி இருப்பார். படம் வெளியீட்டிற்கு பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இதையடுத்து, மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவான படத்திற்கு கத்தி என தலைப்பு வைத்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சமந்தா நடித்திருந்த அந்த படமும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. பல நாட்கள் எதிர்பார்ப்புக்கு பிறகு இந்த காம்போ தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முன்னதாக வெளியான 2 படங்களை போலவே இந்த படத்துக்கும் ஆயுதம் ஒன்றின் பெயரையே தலைப்பாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்ததாகவும், அந்த லிஸ்டில் கோடரி என்ற பெயர் முந்துவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், முதல்முறையாக இவர்கள் படத்துக்கு ஒரு வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. சர்கார் என்ற பெயரை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்கார் என்றால் அரசாங்கம். அரசியலை இப்படம் பேசும் என சொல்லியதற்கு ஏற்ப இந்த தலைப்பு அமைந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், SARKAR என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு புதிய அர்த்தம் சமூக வலைத்தளங்களில் ரவுண்ட் அடித்து வருகிறது. அதன்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் எழுத்து, ஏ ஆர் முருகதாஸின் இன்ஷியலில் இருக்கும் இரண்டு எழுத்துக்கள், கலாநிதி என்ற எழுத்தின் முதல் எழுத்து, ஏ ஆர் ரஹ்மானின் கடைசி எழுத்துக்கள் ஆகியவை தான் சர்கார் என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
