Tamil Cinema News | சினிமா செய்திகள்
விரைவில் முடிய இருக்கும் சரவணன் மீனாட்சி… கன்பார்ம் செய்த ரக்ஷிதாவின் புது சீரியல்
சரவணன் மீனாட்சி ரக்ஷிதா தனது புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
ஏலேலோ எலெலேலோ என்ற பாடல் மூலம் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தப்பட்ட சீரியல் சரவணன் மீனாட்சி. முதல் சீசனில் சரவணனாக செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்தனர். இவர்களின் காம்போவால் சீரியலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, இவர்களின் மகன் சக்தி சரவணன், தங்க மீனாட்சியின் காதலை சொல்லியது இத்தொடரின் இரண்டாவது சீசன்.
தங்க மீனாட்சியாக வந்தாலும் ரக்ஷிதா என்ற பெயரையே மறந்து மீனாட்சியாகவே மாறினார். இரண்டாவது சீசன் முடிந்தும் தொடர்ந்து மூன்றாவது சீசன் தொடங்கி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பல நாயகர்கள் மாறினாலும் நாயகி ரக்ஷிதா என்பதால் சமூக வலைத்தளத்தில் கேலிக்கு ஆளானார். மீம்ஸ்கள், ட்ரோல்கள் என வைரல் ஆனாலும் நான் இப்படி தான் என இருப்பவர். தமிழ் தெரிந்த நடிகைகளே இங்கிலிஷ் பேசி பீட்டர் விடும் நிலையில், கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட ரக்ஷிதா அச்சர சுத்தமாக தமிழ் பேசுவது அனைவரையும் கவர்ந்தது.
விஜய் தொலைக்காட்சியில் 1000 எபிசோட்டை கடந்த முதல் சீரியல் சரவணன் மீனாட்சி. இதில், முதல் நாளில் இருந்து நடித்து வருவதால் மீனாட்சிக்கு சிறப்பு விருது விஜய் டெலி அவார்ட்ஸில் கொடுக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களிடம் லைவ் சாட் செய்த ரக்ஷிதா, எல்லாவற்றுக்கும் முடிவு இருக்கிறது என்றார். இதனால், இந்த வருட இறுதிக்குள் சரவணன் மீனாட்சி முடியும் என கிசுகிசுக்கப்பட்டது. சில பேட்டிகளில், இந்த தொடர் முடியும் வரை தன்னால் எந்த புது சீரியலையும் ஒப்புக்கொள்ள முடியாது என தெரிவித்து இருந்தார் ரக்ஷிதா.
இந்நிலையில், ரக்ஷிதா தனது கணவர் தினேஷுடன் ஜோடியாக ஒரு புது சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை ரக்ஷிதாவும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆனால், எந்த தொலைக்காட்சியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனத் தெரிவித்தார். இந்த ஜோடி முதல்முறையாக விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீர்யலில் ஒன்றாக நடித்து காதல் கொண்டதால் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புது சீரியலை ஒப்புக்கொண்டு இருப்பதால், ரக்ஷிதா விரைவில் மீனாட்சி வேடத்தை முடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
