santhanam as action hero
santhanam-as-action-hero

சந்தானம் நடிப்பில் தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சந்தானம்-செல்வராகவன் இணைந்து படம் பண்ணப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சந்தானம் தனது நெருங்கிய நண்பரான விடிவி கணேஷ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சந்தானத்துடன் கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து பயணித்த சேதுராமன் என்பவர் இயக்குகிறார். ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துவரும் வைபவி சாண்டில்யா இப்படத்திலும் அவருக்கு ஜோடியாக மீண்டும் இணைகிறார்.

மேலும், ரோபோ சங்கர், சம்பத் ஆகியோருடன் விடிவி கணேஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அபி என்பவர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

இதுவரையில், காமெடி, ரொமான்ஸ் செய்து வந்த சந்தானம், இந்த படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் அவதாரத்தில் இறங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ‘தில்லுக்கு துட்டு’ படத்திலும் ஒருசில சண்டைக் காட்சிகளில் சந்தானம் நடித்திருந்தார். அதில் இவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்ததால், இதில் முழுநேர ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். மேலும், ஆக்ஷனுடன் ரொமான்ஸும் கலந்திருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.