Tamil Cinema News | சினிமா செய்திகள்
சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு சஞ்சு பெயர் வரக் காரணம்… இயக்குநரே வெளியிட்ட தகவல்
பாலிவுட் சர்ச்சை நாயகன் சஞ்சய் தத்தின் படம் சஞ்சு என்ற பெயரில் படமாகியுள்ளது. இதில் சஞ்சய் தத் கதாபாத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். இந்த படத்தை த்ரீ இடியட்ஸ், பி.கே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கிறார்.
ரன்பீர் கபூருடன் அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், தியா மிர்சா, பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள சஞ்சு படத்தின் திரைக்கதையை அபிஜத் ஜோஷியுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி எழுதியிருக்கிறார். இதில், சஞ்சய் தத்தின் தாய் நர்கீஸ் தத் ரோலில் மணீஷா கொய்ராலாவும், அவரின் மனைவி மான்யதா தத்தாக தியா மிர்சாவும் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் தத்தின் தந்தையும் முன்னாள் நடிகருமான சுனில் தத் பாத்திரத்தை பரேஷ் ராவல் ஏற்று நடித்திருக்கிறார்.
சினிமாவில் நாயகனாக நடித்த சஞ்சய் தத் நிஜ வாழ்வில் ஏறக்குறைய ஒரு வில்லன் போலவே வாழ்ந்திருந்தார். மும்பையின் நிழல் உலக தாதாக்களுடன் இருந்த தொடர்பு, 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இவரைச் சிக்க வைத்தது. ஆயுதங்கள் பதுக்க உதவியதாக இவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபணமாகவே, சிறையில் சில ஆண்டுகளை சஞ்சய் தத் கழிக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், சிறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு பரோல் வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவரை தண்டனைக் காலம் முடியும் முன்னரே ரிலீஸ் செய்ததாக மகராஷ்டிரா அரசு மீது ஒரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது.
அதேபோல், பெண்கள் தொடர்பு, போதை வஸ்துக்களுக்கு அடிமை என சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மிக நெருக்கமாகப் பதிவு செய்யும் வகையில் சஞ்சு படம் தயாராகி இருக்கிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் சஞ்சு என படத்துக்கு பெயர் வரக் காரணம் என்ன என்பது குறித்து இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மனம் திறந்துள்ளார். இதுகுறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் தத்தின் தாய் நர்கீஸ் தத் அவரை அன்போடு அழைக்கும் பெயர்தான் சஞ்சு.. ஆகவேதான் படத்துக்கும் சஞ்சு எனப் பெயரிட்டதாக ராஜ்குமார் ஹிரானி விளக்கம் அளித்துள்ளார்.
