ஒருவழியாக படப்பிடிப்புக்கு தயாராகியது தமிழ் திரையுலகின் ‘பாகுபலி’

ஒருவழியாக படப்பிடிப்புக்கு தயாராகியது தமிழ் திரையுலகின் ‘பாகுபலி’

கோலிவுட்டின் பிரமாண்ட சரித்திர காவியமாக உருவாக இருக்கும் சங்மித்ரா படத்தின் ஷூட்டிங் ஆகஸ்டில் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

sangamithra

கலகலப்பு – 2 படத்துக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படம் அறிவிக்கப்பட்டது. அவரின் ட்ரீம் புராஜக்டான இந்த படத்தின் கதை 8ம் நூற்றாண்டில் நடப்பது போல் அமைக்கப்பட்டது. படத்தை மிகபிரமாண்டமாக ரூ.400 கோடி செலவில் ஸ்ரீதேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. படத்தில் நாயகர்களாக `ஜெயம்’ ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முடிவு செய்யப்பட்டனர். மேலும், சங்கமித்ராவாக டைட்டில் ரோலில் ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

படம் பிரமாண்டமாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சிகளை பிரான்ஸில் நடந்த கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டனர். நாயகி ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹீரோக்கள் ஜெயம் ரவி, ஆர்யா என மூன்று பேரின் லுக்குகளும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர். இதையடுத்து ப்ரீ புரடக்‌ஷன் வேலைகளைத் தயாரிப்பு நிறுவனம் செய்து வந்த நிலையில், திடீரென படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, படத்தின் ஷூட்டிங் தொடங்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நாயகியை முடிவு செய்யாமல், படக்குழுவும் தாமதித்து வந்தது. ஒரு சில மாதங்கள் கழித்து, தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து பிரபலமான, பாலிவுட் நடிகை திஷா பதானி ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்ச் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டு இருந்த நிலையில், ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங்கை வரும் ஆகஸ்டில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி அடங்கமறு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், அதை முடித்துவிட்டு இந்த ஷுட்டில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. அதேநேரம், திஷா பதானி மற்றும் ஆர்யா உள்ளிட்டோரிடம் ஆகஸ்டில் தேதிகள் ஒதுக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ஷூட்டிங் ஆகஸ்டில் தொடங்குவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.