‘சண்டக்கோழி 2’ விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சண்டக்கோழி’. 2005-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் 2-ம் பாகம் மூலமாக மீண்டும் இணைய இயக்குநர் லிங்குசாமி – விஷால் முடிவு செய்தார்கள். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.

இந்நிலையில் ‘சண்டக்கோழி 2’ கைவிடப்பட்டதாகவும், அல்லு அர்ஜுன் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு லிங்குசாமி, “‘சண்டக்கோழி 2’ விரைவில் தொடங்கப்படும். அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவேன். இனிமேல் வதந்திகள் தேவையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘சண்டக்கோழி’ படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.