இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பில் பஞ்சாயத்து தலைவர் விஜய் மற்றும் நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது டாக்டர் கேரக்டர்களில் நடிக்கும் விஜய்-காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைந்துவிடும் என்றும் அதன் பின்னர் மீண்டும் சென்னையில் வரும் ஜூன் முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சென்னையில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் மூன்றாவது கேரக்டரான மேஜிக்மேன் கேரக்டரின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பு சமந்தா கலந்து கொள்ளவுள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் மூன்றாவது கேரக்டர் மேஜிக்மேன் கேரக்டர் என்றும் அவருக்கு ஜோடி சமந்தா என்பதையும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.