சமந்தாவிற்கும் நாகசைத்தன்யாவிற்கும் திருமணம் நிகழவுள்ளது. எம் மாய செஸாவே என்ற படத்தில்தான் இருவரும் முதலில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் அறிமுகத்திற்கு பிறகு இருவரும் நண்பர்களாக இணைந்து பழக ஆரம்பித்தனர்.

இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. ஆனால் இது குறித்து இருவரும் பேட்டிகளில் மழுப்பிக் கொண்டே வந்தனர். இறுதியாக சமந்தாதான் முதலில் தனது காதலை சமூக வலைதளங்களில் பகிரங்கமாக பகிர்ந்தார்.

ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டிய நாகசைத்தன்யாவின் அப்பாவும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமாகிய நாகார்ஜுனா பிறகு இவர்கள் காதலுக்கு முழுமனதுடன் தனது சம்மதத்தை தெரிவித்தார். எனது மகனின் விருப்பமே எனக்கு முக்கியம், அவனது ஆசைக்கு எப்போதும் நான் தடையாக இருக்கமாட்டேன் என்று நாகார்ஜுனா தெரிவித்தார்.

நாகார்ஜுனா, அமலா, நாகசைத்தன்யா என்று குடும்பமே நடிப்புத் துறையில் இருந்தாலும் ஒவ்வொருவரும் அன்பு காட்டுவதில் எல்லை இல்லாதவர்கள் என்று சமந்தா புகழாரம் சூட்டி பேசிக்கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இருவருக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தில் ஒரு புடவையை நாகசைத்தன்யா பரிசாக கொடுத்து அசத்தினார். அந்த புடவையில் இருவரும் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தன. மாப்பிள்ளை சீரியலில் வரும் திருமண தடைகள் போல அடுத்தடுத்து இவர்கள் திருமண தேதியில் பல தடைகள் குறுக்கிட்டன.

அனைத்தையும் தாண்டி கோவாவில் இவர்கள் திருமணம் நடைபெறும். திருமணம் இந்து முறைப்படியும், மறுநாள் கிருஸ்தவ முறைப்படியும் நடைபெற உள்ளது. கல்யாணத்துக்கு மாமியாரான அமலாவும் மாமனாரான நாகார்ஜுனாவும் நான்கு நாட்கள் முன்பே கோவா சென்று ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டனராம்.

கோவாவில் பிரபலமான டபிள்யூ ஹோட்டலில் சுமார் பத்து கோடி செலவில் திருமணம் இவர்கள் நடைபெற உள்ளது. அந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு வாடகை சுமார் 16 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை இருக்குமாம்.

Samantha-NagaChaitanyaஇவ்வளவு செலவு செய்து திருமணம் செய்தாலும் கல்யாணத்திற்கு வெறும் 150 நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுத்துள்ளனராம். காரணம் முக்கியமான குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் இருந்தாலே போதும் என்று நாகார்ஜுனா சொல்லிவிட்டாராம்.

மேலும் சமந்தா திருமணத்திற்கு பிறகு நடிப்பேன், ஆனால் இனி கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று ஒரு பெரிய குண்டை ரசிகர்கள் தலையில் போட்டுள்ளார். ஏற்கனவே சமந்தா மீது நாகசைத்தன்யா சந்தேகம் கொண்டு பல முறை இருவருக்குள்ளும் லடாய் வந்ததாய் கிசு கிசுக்கள் வந்தன. தற்போது அந்த காரணத்தால்தான் சமந்தா இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லியதாய் கூறப்படுகிறது.

எது எப்படியோ இனிமே அது நம்முடைய சமந்தா இல்லை என்பது மட்டும் உறுதி.