Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்வீட் எடு கொண்டாடு! ஃபிலிம் பேர் விருது குஷியில் பிரேமம் மலர் டீச்சர்!

மலையாள திரையுலகிற்கும் தமிழ் ரசிகர்களுக்கும் என்றுமே பிரிக்க முடியாத பந்தம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் மலையாள படமோ, மங்கைகளோ தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர். ஜிமிக்கி கம்மல் ஷெரில், ப்ரியா வாரியர் உட்பட எல்லாருமே மலையாள குயில்கள் என்றாலும் தமிழ் ரசிகர்கள் அவர்களுக்கு ஆர்மி தொடங்கும் அளவுக்கு இங்கு தான் செம வைரலாக இருக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் விதை போட்டது என்னவோ ஒரே படம் தான். ஆம் ப்ரேமம்.
எப்போது மலையாள படம் தமிழ் ரசிகர்களால் விரும்பப்பட்டாலும் அனைவரையும் சென்று சேர்வது இல்லை. ஆனால் எல்லா தரப்பினராலும் விரும்பப்பட்ட படம் ப்ரேமம் மட்டுமே. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு திரையரங்கிலும் 200 நாட்களை கடந்து சாதனை செய்தது. ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார். சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா ப்ரமேஸ்வரன் ஆகிய மூன்று நாயகிகளுடன் படம் வெளிவந்தது.
மூன்று நாயகிகளுடன் நிவின் பாலிக்கு ஏற்பட்ட காதலே படத்தின் பின்னணியாக அமைந்து இருந்தது. பிரேமத்தில் காட்டப்பட்ட முக்காதல்களில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்பட்டது ‘மலர்-ஜோர்ஜ்’ காதலே. ஒவ்வொருத்தரும் தங்களின் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தனர். எத்தனை ஹிட் படங்கள் வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் ப்ரேமத்தின் ஒரிஜினல் வெர்சன் டச்சை தர முடியாது மட்டுமே நிதர்சனம். தமிழ் பெண் சாய் பல்லவி இன்று பலருக்கு மலையாள மலர் டீச்சராகவே மனதில் சிம்மாசனம் போட்டு விட்டார்.
பிரேமம் படத்துக்குப் பின்னர் நல்ல கதைகள் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்வேன் என்று கவனமாக இருந்த சாய் பல்லவி, தமிழில் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடிக்க வந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டார். அதன்பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்திய அவர் ஃபிடா படத்தில் நடித்தார். பிரேமம் படம் போலவே இந்த படமும் சாய் பல்லவிக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. மேலும், ஆந்திராவிலும் தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை இதன்மூலம் சாய் பல்லவி உருவாக்கிக் கொண்டார்.
சூப்பர் ஹிட் அடித்த ஃபிடா படம் மூலம் சாய் பல்லவிக்கு இன்னொரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது சாய் பல்லவிக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் அம்மணி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். வளரும் நடிகையான தனக்கு இந்த விருது மேலும் உற்சாகம் அளிக்கும். மேலும் சிறப்பான படங்களில் நடிக்க ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாகக் கூறி நெகிழ்ந்திருக்கிறார் மலர் டீச்சர். இவர் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
