சைதாப்பேட்டையில், தாயையும் தங்கையையும் கொன்ற இன்ஜினீயர், போலீஸ் விசாரணையில்… ‘தப்பு பண்ணிட்டேன் சார், என்னையும் கொன்னுடுங்க’ என்று கதறியுள்ளார். அவருக்கு போலீஸார், கவுன்சலிங் அளித்ததோடு, சிறையிலும் தொடர்ந்து கவுன்சலிங் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

 
சென்னை, சைதாப்பேட்டை, கே.பி.கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தார். இவரது கணவர் சண்முகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்துவிட்டார். இதனால், ஹேமலதா, மகன் பாலமுருகன், மகள் ஜெயலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். பாலமுருகன், எம்இ படித்துவிட்டு ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றினார். ஜெயலட்சுமி, இன்ஜினீயரிங் படித்துவந்தார்.

சைதாப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு

இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி சண்முகத்தின் தங்கை யசோதா, ஹேமலதாவின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் யசோதா, நேரில் அங்கு சென்றார். அப்போது, கழுத்தில் ரத்தகாயங்களுடன் ஹேமலதா வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார்.  மகள் ஜெயலட்சுமி, படுக்கையறையில் கழுத்து, வயிற்றில் ரத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.  யசோதா, சைதாப்பேட்டை போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தியதில்… தாயையும் தங்கையையும்  பாலமுருகன் கொலைசெய்தது தெரியவந்தது. அதன்பேரில், அவரை போலீஸார் கைதுசெய்தனர். வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது, தண்ணீர் தொட்டியில் மூன்று செல்போன்கள், ஒரு லேப்டாப் இருந்ததை போலீஸார் கண்டுப்பிடித்தனர். அதில், சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. கைதான பாலமுருகன், கொலைசெய்ததற்கான காரணத்தை போலீஸாரிடம் சொன்னபோது, அவர்களுக்கே கண்ணீர் வரவைத்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாலமுருகனின் அப்பா சண்முகம், அரசுத்துறையில் பணியாற்றிவந்துள்ளார். ஹார்ட் அட்டாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார். அப்பாவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்துள்ளார் பாலமுருகன். அதன்பிறகு, அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், அப்பாவின் முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்த  பாலமுருகனின் மனநிலை மேலும் பாதித்துள்ளது. இதனால், அப்பா சென்ற இடத்துக்கு மூவரும் சென்றுவிடுவோம் என்று ஹேமலதாவிடம் பாலமுருகன் சில நாள்களுக்குமுன் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், பாலமுருகனை சமாதானப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், அப்பாவின் நினைவுகள் அவரை வாட்டியதால், தற்கொலைசெய்துகொள்ள முடிவுசெய்துள்ளார். அப்போது, அம்மாவும் தங்கையும் அனாதையாகிவிடுவார்கள் என்று கருதிய பாலமுருகன், நள்ளிரவில் இருவரையும் கொலைசெய்துள்ளார். பிறகு, தற்கொலை செய்ய கேளம்பாக்கம் கடலுக்குள் சென்றபோது, அலை அவரை வெளியே தள்ளிவிட்டது. இதனால், கடற்கரையில் கால்போன போக்கில் நடந்துசென்றபோது, ரோந்து போலீஸார் பாலமுருகனைப் பிடித்து சைதாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர். அப்போது, பாலமுருகன், ‘தப்பு பண்ணீட்டேன் சார், நானும் சாகணும், அம்மா, தங்கையைக் கொன்ன பாவம் என்னைச் சும்மா விடாது’ என்று கதறியுள்ளார். என்னை வெளிய விடுங்க, நான் இனி உயிரோடு இருந்து எந்தப் பயனும் இல்லை. அப்பா, அம்மா, தங்கை என எல்லோரும் போன பிறகு நான் மட்டும் இருந்து என்ன பயன். நானும் சாகணும்’ என்று விசாரணையின்போது சொன்னார். உடனடியாக நாங்கள், பாலமுருகனை சமாதானப்படுத்தி, அவருக்கு முடிந்தளவுக்கு கவுன்சலிங் கொடுத்தோம். அதன்பிறகே, கொஞ்சம் அமைதியானார். இருப்பினும் அவரது மனநிலை அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு கவுன்சலிங் கொடுப்பது தொடர்பாகவும் சிறைத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.

பாலமுருகன் கைதுசெய்யப்பட்டவுடன், உறவினர்கள் அவரைச் சந்திக்க போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது, எதுவுமே பேசாமல், இறுகிய மனதுடன்  இருந்துள்ளார் பாலமுருகன். அப்போது, அவரது நெருங்கிய உறவுக்காரப் பெண் ஒருவர் பாலமுருகனிடம் பேச முயன்றுள்ளார். ஆனால், அவரிடமும் பாலமுருகன் மனம்விட்டுப் பேசவில்லை. அவரது மன இறுக்கத்தால், வேறு எந்தவித தவறான முடிவையும் எடுப்பதற்கு முன்பு, கவுன்சலிங் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸ் மற்றும் சிறைத்துறை எடுத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.