இரத்தக் களரியில் பழிவாங்கும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன்.. சாணி காகிதம் எப்படி இருக்கு?

சமீபகாலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது சாணி காகிதம் படம். இயக்குனராக நம்மை கவர்ந்த செல்வராகவன் முதன்முதலாக இந்த படத்தில் நடிக்கிறார் என்றதுமே ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது.

அந்த வரிசையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவான இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஜாதி பிரச்சினை, பழிவாங்கும் படலம் பற்றி அழுத்தமாகப் பேசி இருக்கிறது. எழுபதுகளின் பிற்பகுதியில் நடக்கும் இந்த கதை பரதேசபட்டினம் என்ற ஊரில் நடப்பதாக காட்டப்படுகிறது.

கதைப்படி மேல்ஜாதி வர்க்கத்தினரின் ரைஸ்மில்லில் கீழ் ஜாதியைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷின் கணவர் வேலை செய்கிறார். வழக்கம்போல முதலாளித்துவ வர்க்கத்தினரின் அடக்குமுறை தாங்காமல் கீர்த்தி சுரேஷின் கணவர் அவர்களை எதிர்த்துப் பேசி அவமானப்படுத்துகிறார். இதனால் அவரை பழி வாங்குவதற்காக அவர்கள் கீர்த்தி சுரேஷை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் குடிசைக்கு தீ வைத்ததால் கீர்த்தி சுரேஷின் கணவர் மற்றும் குழந்தை பரிதாபமாக இறக்கிறார்கள். இப்படி தங்கள் குடும்பத்தை நாசம் செய்தவர்களை கீர்த்தி சுரேஷ் தன் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. சிறுவயதிலிருந்தே தங்கையுடன் பேசாமல் எதிராளி போலிருக்கும் செல்வராகவன் இந்த சம்பவத்தின் மூலம் தன் தங்கையுடன் கை கோர்க்கிறார்.

அதிலிருந்து அவர்கள் இருவரின் பழிவாங்கும் படலம் ரொம்பவே கொடூரமாக இருக்கிறது. முக்கால்வாசி காட்சிகளை கத்தி குத்து, கொலை, துப்பாக்கி சத்தம் போன்ற காட்சிகள் ஆக்கிரமித்துள்ளது. அதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான நடிப்பு. பல இடங்களில் அவருடைய நடிப்பு திறமை நம்மை வியக்க வைக்கிறது. செல்வராகவனிடம் எப்படி கொலை செய்ய வேண்டும் என்று அவர் உக்கிரமாக சொல்லித்தரும் அந்த காட்சி பயங்கர மிரட்டல்.

இதுதவிர படம் முழுக்க செல்வராகவன் பீடி குடிப்பது, ஒரு ஓட்ட கார் என்று செலவே இல்லாமல் இயக்குனர் படத்தை முடித்திருக்கிறார். மேலும் பல இடங்களில் ஆக்ரோஷமாக நடிக்கிறேன் என்ற பெயரில் ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் படத்தோட தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தமே இல்லை. இதை இயக்குனரே விளக்கிக் கூறினால் தான் நமக்கு தெரியவரும்.

இது ஜாதியை மையமாக வைத்த படம் என்பதால் எதிரிகளை ஒரு பெண் வக்கீல் காப்பாற்றுகிறார். அவரை கொலை செய்து எரிப்பதற்கு முன்னதாக கீர்த்தி ஒரு காகிதத்தில் தன் குடும்பத்தையே அழித்த நபர்களை பழிவாங்க வேண்டும் என்றும், தப்பிச் சென்ற நான்கு பேரின் பெயர்கள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற குறிப்பை எழுதி வைத்திருக்கிறார். அந்த கசங்கிப்போன பேப்பரை தான் சாணி காகிதம் என்று கூறுகிறார்கள்.

மேலும் டீசரில் காட்டப்பட்ட சில காட்சிகள் படத்தில் இடம் பெறவே இல்லை. அதிலும் ஒருவரை பழிவாங்க ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்வது போன்ற காட்சி நம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக காட்டப்பட்டு வருகிறது. அந்த விதியை இயக்குனர் இந்தப் படத்திலும் வைத்திருப்பது சற்று நெருடலாக இருக்கிறது.

ஆகமொத்தம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கர்ண கொடூரமாக பழி வாங்குவதை ரொம்பவும் ஆக்ரோஷமாகவும், வெறித்தனமாக இயக்குனர் காட்டியிருக்கிறார். பல இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகள் ரசிக்கும்படி இல்லை. இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த சாணி காகிதம் தற்போது சுமார் ரகம் என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது.

Next Story

- Advertisement -