Tamil Cinema News | சினிமா செய்திகள்
85 ரூபாயில் வாழ்க்கை. நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சிக் கதை

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சிவக்குமார்.
ஏ.சி.திரிலோக்சந்தர் இயக்கத்தில் கடந்த 1965ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சிவக்குமார், ஹீரோவாக மட்டுமல்லாது பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடம் பெயர் வாங்கியவர். 1960களின் இறுதியில் கந்தன் கருணை படத்தில் முருகனாக இவர் நடித்தார். அந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம்.ஜி.ஆருடன் 2, ஜெமினி கணேசனுடன் 7 மற்றும் சிவாஜி கணேசனுடன் 14 படங்களில் இவர் நடித்திருந்தார். 1974க்குப் பின்னர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.
இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி படத்தின் ஹீரோ சாட்சாத் இவரேதான். 1990கள் வரை முன்னணி நடிகராகத் திகழ்ந்த இவர், அதன் பின்னர் சப்போர்டிங் ரோல்களில் நடித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை நடித்த பெருமை கொண்டார். 1990களின் இறுதியில் தொலைக்காட்சி சீரியல்களிலும் தலைகாட்டத் தொடங்கினார். புகழ்பெற்ற சித்தி தொடரில் ராதிகாவின் கணவராக இவர் நடித்திருந்தார். முன்னணி ஹீரோ, கேரக்டர் ஆர்டிஸ்ட், சீரியல் நடிகர், எழுத்தாளர், ஓவியர் என பன்முகக் கலைஞனாக வலம் வரும் சிவக்குமாரின், ஆரம்ப நாட்கள் வறுமை சூழ்ந்தவை. மிகவும் கஷ்டப்பட்டே வளர்ந்திருக்கிறார்.
இவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக வலம் வருகின்றனர். சிவக்குமார், தனது 100வது படத்தின் போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். அந்த அறக்கட்டளையைத் தற்போது சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் பராமரித்து வருகின்றனர். அகரம் என்ற பெயரிலான அறக்கட்டளை, கல்வி கட்டணம் கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 21 மாணவர்களின் உயர் கல்விச் செலவுகளை அகரம் அறக்கட்டளை ஏற்றிருக்கிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, மாணவர்கள் மத்தியில் நடிகர் சிவக்குமார் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், `எவன் ஒருவன் குறைவான தேவைகளுடன் இருக்கிறானோ, உண்மையில் அவனே செல்வந்தன். சென்னையில் 85 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு மாதத்தைக் கழித்த நான், இந்த உலகை சுண்டுவிரலால் சுற்றுவேன் என்ற தைரியத்தில் வாழ்ந்தேன். இப்போது எனது மகன்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். ஆனால், சுண்டுவிரல் அதே அளவில்தான் உள்ளது.
வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று ஒழுக்கம் மற்றொன்று கல்வி. இவை இரண்டும் இருந்தால் வாழ்க்கையில் நாம் ஜெயித்து விடலாம். அதேபோல், நாம் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்துடன் கல்வி கற்றால், நிச்சயம் நமக்கு வெற்றிதான். உடல் நலனிலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காகத்தான் நான் தினமும் யோகா செய்து வருகிறேன்’’ என்று சிவக்குமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
