Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவசாயிகளுக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் ரூ.2 கோடி நன்கொடை.. நெகிழச் செய்யும் மூத்த நடிகர்

உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பங்களுக்கென ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்போகிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன்.
1969ல் வெளிவந்த சாத் ஹிந்துஸ்தானி படம் மூலம் இந்தி திரையுலகில் நடிகராக அறிமுகமான அமிதாப் பச்சன், ஒரு ஹீரோ இதைத்தான் செய்ய வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப்பை உடைத்தெறிந்தார். இந்திய திரையுலகில் பெரிய ஹீரோவாக இருந்துகொண்டு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுந்து வழங்கிய முதல் நடிகர் இவர்தான். 1969ம் ஆண்டு வரை தற்போது கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் ஒரு நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமிதாப் பச்சன் பெயரில் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன.
பெரும் பணக்காரராக மாறிப்போன அமிதாப், தனது 50 வயதில் ஹீரோயினுடன் டூயட் பாடுவது போன்ற ரொமாண்டிக் ஹீரோக்கள் வேடத்தை ஏற்பதைத் தவிர்த்து விட்டார். இருப்பினும் குணச்சித்திர வேடங்கள், வில்லன் என பல்வேறு அவதாரங்கள் எடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் அவர். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் அமிதாப், இதுவரை பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் விருது, 4 முறை தேசிய விருதுகள், 14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் என 180 விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
அதேபோல், எண்ணற்ற சர்வதேச திரைப்பட விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார் அவர். இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அமிதாப் , 40 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகர் என்ற பெருமைக்குரியவர். இதைத்தவிர, 1984 முதல் 1987 வரை எம்.பியாகவும் அவர் இருந்தார். ராஜீவ்காந்தியுடனான நெருக்கத்தால் காங்கிரஸ் சார்பில் 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர், 1987ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தினார். பின்னர் 2000 முதல் 2005ம் ஆண்டு வரை கோன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை அவர் தொகுத்து வழங்கினார்.
இந்தநிலையில், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்த உதவும் வகையிலும் அமிதாப் பச்சன், ரூ.2 கோடியை நன்கொடையாக அமிதாப் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அமிதாப், நிச்சயம் உதவி செய்வேன், என்னால் முடியும் என டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். தான் அளிக்கும் நிதியுதவி சரியான நபருக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமிதாப், பயனாளிகளை அடையாளம் காண குழு ஒன்றை அமைத்திருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம், பண உதவியை எப்படி செய்வார் என்பது குறித்து அவர் தகவல் எதையும் வெளியிடவில்லை.
