கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டத்துக்கு வந்துவிட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல்-14 அன்று பிரம்மாண்டமான முறையில் விளம்பரங்கள் செய்து இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தாணு. அதற்காக ஒரு கிரியேட்டிவ் டீமே பணியாற்றி வருகிறது.

தெறியை முடித்த கையோடு தனது 60 ஆவது படத்தில் அழகிய தமிழ்மகன் பட இயக்குநர் பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் 60 படத்தின் பூஜை, விஜயா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இயக்குனர் பரதன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட ஒரு சிலர் மட்டுமே இந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளனர். படத்தின் நாயகனான விஜய் வரவில்லை. இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார்.

துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வால் மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரவிருக்கிறார். காஜல் அகர்வாலை, விஜய்யே சிபாரிசு செய்ததாகவும், அதனாலேயே அவருக்கு இரண்டரை கோடி சம்பளம் கொடுத்து கமிட் பண்ணியுள்ளதாகவும் தகவல்.